அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய்
அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் கோப்புப் படம்
பாலிவுட் செய்திகள்

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா 11 வயதில் துணிச்சலாக செய்த செயல் - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சங்கீதா

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகள், ஆராத்யா பச்சன். 11 வயதாகும் இவர், தனது பெற்றோர் மற்றும் தனது தாத்தாவும், பாலிவுட்டின் உச்ச நடிகருமான அமிதாப் பச்சன் ஆகியோருடன் விருது விழாக்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்.

அபிஷேக்-ஆராத்யா-ஐஸ்வர்யா ராய்

இந்தநிலையில், சமீபத்தில் சில யூ-ட்யூப் சேனல்கள் ஆராத்யா பச்சனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஏன் அவர் இறந்துவிட்டார் என்று கூட வதந்திகள் பரப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இதனைத் தொடர்ந்து தவறான உள்நோக்கத்துடன் வதந்தி பரப்பியதாக 10 யூ-ட்யூப் சேனல்கள் மீது நடவடிக்கைக் கோரி ஆராத்யா பச்சன் தனது தந்தை அபிஷேக் பச்சன் உடன் சேர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி. ஹரி சங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அவர் கூறியதாவது, “பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் சரி, சாமானியர்களின் குழந்தையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். குழந்தையின் மன, உடல் ஆரோக்கியம் குறித்து தவறான தகவல்கள் பரப்புவதை முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாது” என வேதனை தெரிவித்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம்

மேலும், யூ-ட்யூப் தளத்தை நடத்தும் கூகுள் நிறுவனத்திற்கும் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். ஆராத்யா பச்சன் கவலைக்கிடமான உடல்நிலையுடன் இருப்பதாக யூ-ட்யூப் சேனல்கள் சிலவற்றில் வெளியிடப்பட்டது, குழந்தைகளின் சுதந்திரத்தை பாதிக்கும் வக்கிரமான செயல் என்றும் அவர் சாடினார். குழந்தைகளின் உரிமையை மீறும் வகையில் சில யூ-ட்யூப் சேனல்கள் வெளியிடும் வீடியோக்களை கூகுள் தடுக்கத் தவறுவதாக கூறிய நீதிபதி, யூ-ட்யூப் ஒன்றும் அறக்கட்டளையல்ல எனவும், வியாபார தளம் எனவும் தெரிவித்த அவர், உடனடியாக ஆராத்யா பச்சன் குறித்த வீடியோக்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து கூகுள் நிறுவனம் யூ-ட்யூப் தளத்திலிருந்து அந்த வீடியோக்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக ஆராத்யாவின் தந்தையான அபிஷேக் பச்சன் இதுபோன்று தவறான வீடியோக்கள் வெளியிடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.