பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன். இப்போது ஷாரூக்கானின் `கிங்' படத்தில் நடித்து வரும் தீபிகா, அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் உடன் நடிக்கவுள்ளார். இதற்கு முன் சந்தீப் வங்கா - பிரபாஸ் படமான `ஸ்பிரிட்' படத்தில் தீபிகா - சந்தீப் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, `கல்கி 2898 AD' படத்தின் சீக்குவலில் நடிப்பதாக இருந்த தீபிகா அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது போன்ற விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டது. குழந்தை பிறப்புக்கு பிறகு தன்னுடைய பணி நேரம், சம்பளம் போன்ற விஷயங்களில் தீபிகா கறாராக இருப்பதாகவும், அதுவே சில படங்களில் இருந்து தீபிகா விலக காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த சர்ச்சைகளை தெளிவுபடுத்தும் விதமாக முதன் முறையாக இவற்றை பற்றி உரையாடல் ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார் தீபிகா படுகோன். "ஒரு பெண்ணாக இருப்பதனால் 8 மணிநேரம் மட்டுமே வேலை செய்வேன் என நான் வலியுறுத்துவதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால், இந்தியத் திரையுலகில் பல ஆண் சூப்பர் ஸ்டார்கள் பல ஆண்டுகளாக 8 மணி நேரம் வேலை செய்து வருகின்றனர், அது ஒருபோதும் தலைப்புச் செய்திகளில் இடம் பெறவில்லை. அவர்களின் பெயர்களை கூறவோ, இந்த விஷயத்தை பெரிதாக்கவோ நான் விரும்பவில்லை. ஆனால் பல ஆண் நடிகர்கள் வார இறுதி நாட்களில் வேலை செய்வதில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை அவர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள் என்பது பொதுவெளியில் பலரும் அறிந்ததே.
நாம் ஒரு போதும் ஒரு துறையாக ஒன்றிணைந்து பணியாற்றியதில்லை. இது ஒரு ஒழுங்கற்ற அமைப்பாக இருக்கிறது. ஒரு கட்டமைப்பையும் கொண்டு வரவும், பணிச்சூழலை உருவாக்கவும் வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன். நியாயமான வேலை மற்றும் பணி செய்யும் சூழ்நிலைக்காக பல நேரங்களில் போராடி இருக்கிறேன். இது எனக்குப் புதிதல்ல. சம்பளத்தைப் பொறுத்தவரை, அதனுடன் வரும் எதையும் சமாளிக்க வேண்டியிருந்தது. அதை என்னவென்று அழைப்பது என்று கூட எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் எப்போதும் அமைதியாகவே என் போராட்டங்களை நடத்தினேன். சில விசித்திரமான காரணங்களுக்காக அவை பகிரங்கமாகிவிடுகின்றன. ஆனால் என் வளர்ப்பு முறையில் அது இல்லை. என்னுடைய போராட்டங்களை நான் அமைதியாகவும், கண்ணியமாகவும் செய்தவே எனக்குத் தெரிந்த விதம்" எனப் பேசி இருக்கிறார் தீபிகா படுகோன்.