SRK, Kajol DDLJ
பாலிவுட் செய்திகள்

ஷூட்டிலும் மழை, சிலை திறப்பிலும் மழை! - DDLJ நினைவுகளை பகிர்ந்த ஷாருக் - கஜோல் | SRK | Kajol

இது மிகவும் சிறப்பான உணர்வு. மேலும் நம்பமுடியாத ஒன்றும் கூட. இதனை யாரிடமாவது சொன்னால், உங்களுக்கு சிலை வைத்திருக்கிறார்களா என ஆச்சரியப்படுவார்கள்.

Johnson

`தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' (DDLJ) வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ராஜ்–சிம்ரன் ஜோடியின் வெண்கலச் சிலை லண்டன் லீசெஸ்டர் சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஷாருக்கான் - கஜோல் அங்கு சில ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பின்வருமாறு,

DDLJ

லண்டன் லீசெஸ்டரில் உங்கள் சிலை உள்ளதை எப்படி உணர்கிறீர்கள் எனக் கேட்டதும் கஜோல் "இது மிகவும் சிறப்பான உணர்வு. மேலும் நம்பமுடியாத ஒன்றும் கூட. இதனை யாரிடமாவது சொன்னால், உங்களுக்கு சிலை வைத்திருக்கிறார்களா என ஆச்சரியப்படுவார்கள். அதிலும் இந்த போஸ் மிகப்பிரபலமானது. யார் இதனை பார்த்தாலும் உடனடியாக இது DDLJ படம் என கண்டுபிடித்துவிடுவார்கள். இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், DDLJ படத்தில் ஷாரூக்கின் அறிமுக காட்சியில் மழை பொழியும், இந்த சிலை திறப்பின் போதும் மழை பொழிந்தது. மேலும் என் மகனும் மகளும் படத்தில் நாங்கள் அணிந்தது போன்ற ஆடைகளை அணிந்து வந்தது மேலும் ஆச்சர்யம் தந்தது" என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஷாருக்கான் "DDLJ, நான் மற்றும் கஜோல் ஒரு தீய பழக்கத்தை போல, யாராலும் எங்களை கைவிட முடியாது. எனக்கும் கஜோலுக்கு சிலை என்பது கூடுதல் மகிழ்ச்சி. நாங்கள் 35 ஆண்டுகள் ஒன்றாக பணிபுரிந்திருக்கிறோம். எங்களுக்கு இடையில் குழந்தைப்பருவத்தில் இருந்து பரிட்சயம் உள்ளதை போல ஒரு நட்பு. இவ்வளவு பெரிய சிலை லண்டனில் வைக்கப்பட்டு இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. என்னுடைய குழந்தைகளுக்கு எப்போது இதை காட்டுவேன் என ஆவலோடு இருக்கிறேன்" என்றார்.

SRK

நீங்கள் ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் இரண்டு வகையிலுமே நடித்திருக்கிறீர்கள். இப்போது கிங் படம் நடிக்கிறீர்கள், அடுத்து ஜேம்ஸ் பாண்டாக நடிப்பீர்களா என்றதும் "இல்லை எனக்கு அந்த உச்சரிப்பு வராது. மேலும் எனக்கு shaken martini பிடிக்காது. மேலும் நான் நிறைய ஆக்ஷன் படங்களில் நடித்ததில்லை. எனக்கு விருப்பம் தான் ஆனால் உங்கள் படத்தில் கஜோல் இருக்கும் போது, உங்களால் ஆக்ஷன் செய்ய முடியாது. என்னால் ஜேம்ஸ் பாண்ட் ஆக முடியுமா என தெரியாது, ஆனால் Sean Connery ஆக வேண்டும். அவர் போல முதுமையிலும் ஆக்ஷன் படங்கள் நடிக்க முடிந்தால் மகிழ்வேன். இப்போதைக்கு KING படத்தில் நடிக்கிறேன். அடுத்து என்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை" என்றார் ஷாருக்.

சமீபகாலமாக இந்தி சினிமாக்கள் சரியாக ஓடவில்லை என்ற நிலை ஏற்பட்டது குறித்து கேள்வி கேட்கப்பட "இது பெரிய விவாதத்துக்குரியது. அது இந்தி படங்கள் மட்டும் என்று கிடையாது, உலக அளவிலேயே சினிமா இந்த பிரச்சனையை சந்தித்திருக்கிறது. இப்போது OTT தளத்தில் மக்களுக்கு நிறைய பார்க்க இருக்கிறது. எனவே மக்களுக்கு தியேட்டர் செல்ல வேண்டுமா? வேண்டாமா? என்ற தேர்வு வந்துவிட்டது. எப்போது உங்களுக்கு நிறைய விஷயங்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என சூழல் வருகிறதோ, தேர்ந்தெடுப்பது சிரமமான ஒன்றாகிறது. அதனை ஒரு பிரதானமான பிரச்சனையாக பார்க்கிறேன்" என்றார் கஜோல்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஷாருக் "எப்போதெல்லாம் சமூகத்துக்கு பொழுதுபோக்கு சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் வருகிறதோ, தியேட்டரில் அது ஒரு சிறிய பாதிப்பை ஏற்படுத்தும். டிவி வந்தபோது, VCR வந்தபோது, மொபைல் வந்த போது சில மாற்றங்கள் வரும்தான். ஆனால் கூட்டமாக சேர்ந்து தியேட்டரில் படங்களை பார்க்கும் communal viewing அனுபவம் அலாதியானது. அது எப்போதும் நிலைத்திருக்கும்" என்று கூறினார்.