Adipurush
Adipurush Twitter
பாலிவுட் செய்திகள்

”இனி இந்திப் படங்களுக்கு அனுமதியில்லை”.. ஆதிபுருஷ் பட சர்ச்சையை அடுத்து நேபாளம் அதிரடி முடிவு

PT WEB

ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூலைக் குவித்துவருகிறது. இது ஒருபுறமிருக்க, படத்தில் உள்ள வசனங்கள் கதாபாத்திரங்களை அவமதிப்பதாகப் பல்வேறு தரப்பில் இருந்தும் சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ஆதிபுருஷ் திரைப்படம் தொடர்பான விமர்சனம் மற்றும் சர்ச்சைகள் குறித்து சி.பி.எஃப்.சி. கவனத்தில் கொண்டுள்ளதாகவும், மக்களின் உணர்வுகளை புண்படுத்த எந்த வகையிலும் அனுமதிக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். படத்தின் சில வசனங்களை மாற்ற எழுத்தாளரும், இயக்குநரும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர், இவை அனைத்தும் தனது மேற்பார்வையில் நடைபெறும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மண்டுவில் இந்தி திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்பட சர்ச்சையை தொடர்ந்து, காத்மண்டுவில் அனைத்து இந்தி படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தில் ‘சீதா தேவி இந்தியாவின் மகள்’ என்ற சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்காமல் திரையிடுவது சீராக்க முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என காத்மண்டு மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த வசனங்களை நீக்காததால் காத்மண்டுவில் இன்று முதல் அனைத்து இந்தி திரைப்படங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா தளமான போக்ஹாரா நகரத்திலும் இந்திப் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.