சினிமா

"இந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை" - நடிகர் மகேஷ் பாபு அதிரடி

ஜா. ஜாக்சன் சிங்

"இந்தி திரைப்படங்களில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன்; ஏனெனில் எனக்கு ஏற்ற சம்பளத்தை பாலிவுட்டால் கொடுக்க முடியாது" என்று தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

ஒருகாலத்தில் பாலிவுட்டில் தயாரிக்கப்படும் இந்தி திரைப்படங்களே நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் 'டப்' செய்யப்பட்டு வெளியிடப்படும். ஆனால் கடந்த சில வருடங்களாகவே தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்து வருகிறது.

பாகுபலியில் தொடங்கி கேஜிஎஃப் 2 வரை பல படங்கள் இவ்வாறு பான் இந்தியா திரைப்படங்களாக வெளியிடப்பட்டு வசூலை வாரிக் குவித்திருக்கிறது. இந்த திடீர் டிரெண்டிங் மாற்றத்தால் பாலிவுட் திரையுலகமே தென்னிந்தியா மீது ஒருவித அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு உதாரணமாக, பல இந்தி நடிகர்கள் தென்னிந்திய திரைப்படங்கள் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதனால் வட இந்திய - தென்னிந்திய ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்படுவதும் வாடிக்கையாகியுள்ளது.

இந்நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் அடுத்த திரைப்படமான 'மேஜர்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதரபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மகேஷ் பாபு பேசியதாவது:

தெலுங்கு திரையுலகின் வளர்ச்சி உண்மையில் என்னை பிரமிக்க வைத்துள்ளது. தெலுங்கு திரைப்படங்கள் நாடு முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெறுவதால், இந்திய திரைப்படங்கள் என ஒருகாலத்தில் வரையறுக்கப்பட்டு வந்த வார்த்தை ஒன்று (பாலிவுட்டை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) இன்றைக்கு தேய்ந்து வருகிறது. எனது பலமே தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பது தான் என்பதை தீர்க்கமாக நம்புகிறேன். பான் இந்தியா நட்சத்திரமாக உருவாக வேண்டும் என்ற ஆசை எனக்கு துளியும் கிடையாது. நான் நடித்த தெலுங்கு திரைப்படங்களும், மற்ற திரைப்படங்களும் நாடு முழுவதும் ரசிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இன்று அது நிறைவேறி வருகிறது. இந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் தினந்தோறும் எனக்கு வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியில் ஒருபோதும் நான் நடிக்க மாட்டேன். ஏனெனில் எனக்கு ஏற்ற சம்பளத்தை பாலிவுட்டால் கொடுக்க முடியாது.அதனால் இந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இவ்வாறு மகேஷ்பாபு பேசினார்.