சைஃப் அலி கானும், கரீனா கபூரும் இரு மகன்களுடன் மேற்கு பந்தராவில் இருக்கும் சத்குரு ஷரன் பில்டிங்கில் வசித்துவருகிறார்கள். முழுக்க முழுக்க பிரபலங்கள் சூழ்ந்து காணப்படும் இந்த பகுதியில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம்.
இந்தநிலையில்தான், இன்று அதிகாலை 2.30 மணிக்கு , சைஃப் அலிகான் வீட்டுக்குள் மர்ம் நபர் ஒருவர் நுழைந்திருக்கிறார். திருடும் நோக்கத்துடன் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை கத்தியை வைத்து அந்த நபர் மிரட்டியிருக்கிறார். சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தப் பெண்ணைக் காப்பாற்ற சைஃப் அலி கான் குறுக்கிட்டு இருக்கிறார். அப்போது, சைஃப் அலி கானை சரமாரியாக குத்திவிட்டு , அந்த இடத்தைவிட்டு திருடர் தப்பியோடியிருக்கிறார்.
மர்ம நபரின் தாக்குதால் தண்டுவடப் பகுதியில் படுகாயம் அடைந்திருக்கும் சைஃப் அலி கானுக்கு இப்போது ஆறு இடங்களில் சரமாறியாக கத்திகுத்து ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில், தனியார் மருத்துவமனையில் சைஃப் அலிகானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் கரீனா கபூருக்கோ, சைஃப் அலி கானின் மகன்களுக்கோ எந்த அசாம்பாவிதமும் நடக்கவில்லை. குழந்தைகள் அறையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சம்பவத்தின்போது, கரீனா கபூர் தன் தோழிகளுடன் இருந்ததாகவும், சைஃபும் குழந்தைகளும் மட்டுமே வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இப்போது வரை மூன்று பேரைக் கைது செய்து மும்பை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் உள்ள பகுதியில், எப்படி இவ்வளவு எளிதாக ஒருவர் நுழைந்து சைஃப் அலிகானை தாக்க முடியும்? என்னும் கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.