அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார். குடியேற்றக் கொள்கையில் பல கெடுபிடிகளைக் காட்டி வரும் ட்ரம்ப், இந்தியாவிற்கும் கருணை காட்டவில்லை. அதன்படி, அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக அவர்கள் வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் நியூயார்க் போலீசாரால் 4 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபலமான நடிகராக அறியப்படுபவர், நீல் நிதின் முகேஷ். இவர், நடிகர் விஜய் நடித்த ’கத்தி’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில், அவர் நிகழ்ச்சி ஒன்றுக்காக நியூயார்க் சென்றுள்ளார். ஆனால், அவர் போலி பாஸ்போர்ட்டில் நுழைந்துவிட்டதாக எண்ணி அந்நாட்டு போலீசார் அவரை சிறைபிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக அங்கு நடந்தது குறித்து முகேஷ் பேட்டியளித்துள்ளார். அதில், ”நான் 'நியூயார்க்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம். பார்ப்பதற்கு இந்தியர்போல இல்லை, போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவில் நுழைந்ததாகக் குற்றம்சாட்டி நியூயார் விமான நிலையத்தில் காவலர்கள் என்னைச் சிறைபிடித்தனர். எதைச் சொல்லியும் கேட்காமல் 4 மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர். 4 மணி நேரத்துக்குப் பின் அவர்கள் என்னிடம் வந்து, 'என்ன சொல்லப் போகிறாய்' எனக் கேட்டனர். அதற்கு நான் 'என்னைப் பற்றி கூகுளில் தேடிப் பாருங்கள்' என்றேன். அதன் பிறகே நான் விடுவிக்கப்பட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.