’புரப் அவுர் பஸ்சிம்’ மற்றும் ’கிராந்தி’ உள்ளிட்ட தேசபக்தி படங்கள் மூலம் பிரபலமான நடிகர் மனோஜ் குமார், மும்பையில் தனது 87வது வயதில் காலமானார். ஏற்கெனவே இதயம் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மனோஜ் குமாரின் மரணம் குறித்து அவரது மகன் குணால் கோஸ்வாமி, "அவர், இந்த உலகத்திற்கு அமைதியாக விடைபெற்றது கடவுளின் அருளால்தான். அவரது இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறும். அவர் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், "அவர் இந்திய சினிமாவின் ஒரு சின்னமாக இருந்தார். குறிப்பாக அவரது தேசபக்தி ஆர்வத்திற்காக நினைவுகூரப்பட்டார். அது அவரது படங்களிலும் பிரதிபலித்தது. மனோஜ் ஜியின் நடிப்புத் திறமை தேசிய பெருமையின் உணர்வைத் தூண்டின. மேலும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்" எனப் பதிவிட்டுள்ளார்.
அதுபோல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், “ஸ்ரீமனோஜ் குமார் ஜி ஒரு பல்துறை நடிகர். தேசபக்தி நிறைந்த திரைப்படங்களை உருவாக்கியதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். 'பாரத் குமார்' என்று பிரபலமாக அழைக்கப்படும் 'உப்கார்', 'புரப் மற்றும் பஸ்சிம்' போன்ற படங்களில் அவரது மறக்க முடியாத நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருந்தார். அவரது சினிமா மரபு அவரது படைப்புகள் மூலம் நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்” எனப் பதிவிட்டுள்ளார்.
திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, "அவரைப் போன்ற தேசபக்தர்களும் கலைஞர்களும் ஒருபோதும் இறக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மனோஜ் குமார் 1937ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் (இப்போது பாகிஸ்தான், கைபர் பக்துன்க்வா) உள்ள அபோட்டாபாத் என்ற ஊரில் பிறந்தவர் ஆவார். அவருக்கு ஹரிகிருஷ்ணன் கோஸ்வாமி எனப் பெயரிடப்பட்டது. 1957ஆம் ஆண்டு ’ஃபேஷன்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான குமார், பின்னர் சயீதா கானுடன் இணைந்து நடித்த ’காஞ்ச் கி குடியா’ (1961) திரைப்படத்தில் தனது முதல் வெற்றியைப் பெற்றார். அவரது த்ரில்லர் படமான ’கும்நாம்’ (1965), அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும். இது அப்போது, ரூ.2.6 கோடியை வசூலித்தது. அதே ஆண்டில், குமார் ’ஷஹீத்’ படத்தில் நடித்தார். இது சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் வாழ்க்கையை ஆராய்ந்தது.
‘உப்கார்’ (1967), ’புரப் அவுர் பச்சிம்’ (1970) மற்றும் ’கிராந்தி’ (1981) போன்ற தேசபக்தி படங்களில் நடித்ததன்மூலம் அவருக்கு 'பரத் குமார்' என்ற புனைப்பெயரைப் பெற்றுத் தந்தன. ’ஷோர்’ (1972) என்ற படத்தையும் இயக்கி நடித்தார். 1975ஆம் ஆண்டு தனது ’ரொட்டி கபட அவுர் மகான்’ படத்திற்காக பிலிம்பேர் விருதுகளில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார். மேலும், 1992இல் பத்மஸ்ரீ பட்டமும், 1999இல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், 2015இல் தாதாசாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது. 2004 பொதுத் தேர்தலுக்கு முன்பு, குமார் அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.