சினிமா

“கஜா பாதிப்பால் மிகவும் வருத்தமடைந்தேன்” - ஆமிர் கான்

webteam

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பேரழிவு குறித்து கேள்விப்பட்டதும் மிகவும் வருத்தமடைந்ததாக பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திரி மரங்கள் வேரோடு முறிந்து கிடக்கின்றன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அனைத்து இடங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 

இதற்கிடையே கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களை அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பார்வையிட்டு, தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். பல பிரபலங்கள் தங்கள் வருத்தங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கஜா புயல் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆமிர் கான், “தமிழ்நாடு கஜா புயலால் பேரழிவு அடைந்திருப்பதை அறிந்ததும் மிகவு வருத்தமடைந்தேன். புயலால் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு உதவிபுரிய அனைவரும் முன்வர வேண்டும். நம்மால் முடிந்த நிதியை வழங்க முயற்சிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

ஆமிர் கானின் இந்தப் பதிவிற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், “மிக்க நன்றி ஆமிர் கான் ஜி. நம்மிடையே பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் மக்கள் விரும்புவது ஒற்றுமையைதான். அதுவே உண்மை. ‘ஒரே தேசம்’” என்று குறிப்பிட்டுள்ளார்.