கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் திடைப்படத்தின் இரண்டாம் பாகம்தான் எம்புரான். மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் சினிமா கடந்த 27-ம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் ரிலீசுக்கு முன்பே சுமார் 50 கோடி ரூபாய்க்கு டிக்கெட் முன்பதிவு நடந்ததாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் எம்புரான் சினிமாவில் பா.ஜ.க, காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகளை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் சூடான பதிவுகள் வலம்வருகின்றன.
இதற்கு விளக்கம் அளித்த படத்தின் திரைக்கதையாசிரியர் கோபி, 'இந்த சர்ச்சையில் நான் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பேன். ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் படத்தை பற்றி விளக்குவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் போராட விரும்பினால் போராடட்டும்' என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் கலவரம் காரணமாக பா.ஜ.க-வுக்கு ஆட்சி அதிகாரத்தை பிடித்தாகவும் கருத்துக்கள் எம்புரான் சினிமாவில் உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினீஸ் கொடியேரி முகநூல் பக்கத்தில் கருத்து பகிர்ந்திருந்தார்.
சிலர் எம்புரான் சினிமா பார்ப்பதற்காக முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்துசெய்து அதன் ஸ்கிரீன்ஷாட்டுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.
மேலும்,
ஒளிப்பதிவாளர், பிசி ஸ்ரீராம் இதுகுறித்து தெரிவிக்கையில், “ குற்ற உணர்வு அவர்களை எதிர்வினையாற்ற வைக்கிறது. அவர்கள் குற்ற உணர்வைக் குறைக்க அந்த பகுதிகளை நீக்கச் சொல்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் உள்ளதை கிண்டல் செய்யும் விதமாகவும் காட்சி அமைப்புகள் உள்ளதாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜய், தனது சமூக வலைதளத்தில் இப்படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “ மலையாளத் திரையுலகத்தை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லும் எம்புரான் படத்தைப் பார்த்தோம். திரைப்படம், அதன் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு எதிராக கும்பல்கள் பரவலான வெறுப்பு பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்ட நேரத்தில் படம் பார்க்கப்பட்டது. நாடு கண்டிராத மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றான இத்திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது அதன் சூத்திரதாரிகளான சங்பரிவாரை கோபப்படுத்தியுள்ளது. அணியினர் மட்டுமின்றி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களும் பகிரங்க மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இந்த அழுத்தம் காரணமாக தயாரிப்பாளர்கள் படத்தை மறுதணிக்கை செய்து குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூட செய்திகள் வந்துள்ளன. இந்த கும்பல்களால் உருவாக்கப்பட்ட இந்த அச்சச் சூழல் கவலையளிக்கிறது.
ஜனநாயக சமூகத்தில் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். கலைப் படைப்பையும் கலைஞரையும் அழிக்கவும் தடை செய்யவும் இந்த வன்முறையான அழைப்புகள் பாசிச மனப்பான்மையின் புதிய வெளிப்பாடுகள். இது ஜனநாயக உரிமைகளை மீறும் செயலாகும். திரைப்படங்களைத் தயாரிப்பது, அவற்றைப் பார்ப்பது, ரசிப்பது, மதிப்பிடுவது, உடன்படுவது, உடன்படாதது ஆகிய உரிமைகளை இழக்கக் கூடாது. அதற்கு, ஜனநாயக மதச்சார்பற்ற விழுமியங்களில் வேரூன்றிய இந்நாட்டின் ஒன்றுபட்ட குரல் எழ வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.