சினிமா

‘டிஆர்பி மன்னன்’ ஆக ‘பிகில்’ விஜய் புதிய சாதனை

‘டிஆர்பி மன்னன்’ ஆக ‘பிகில்’ விஜய் புதிய சாதனை

webteam

‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சி டி.ஆர்.பி-யில் சாதனை படைத்துள்ளது.

தமிழ்த் திரையிலகில் விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அவரது படம் தொடர்பான அறிவிப்புகளை, அவரின் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய் படத்தின் டீஸர் அல்லது டிரைலர் வெளியானால் உடனே அதை அதிக லைக்குகள் பெற வைத்து, யூடியூப்-ல் சாதனை படைக்க செய்கின்றனர். இந்த வரிசையில் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா புதிய சாதனை படைத்துள்ளது. 

விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான விஜய் ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் நிரம்பியது. அத்துடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அனுமதிச்சீட்டு இருந்தும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, இறுதியில் போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பலர் அதிருப்தி அடைந்தனர். அத்துடன் நிகழ்ச்சியில் விஜய் பேசிய அரசியல் விமர்சனங்கள் சர்ச்சையை கிளப்பின.

இந்த நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஒளிபரப்பானது. இதனை 95,94,000 பேர் கண்டுகளித்துள்ளனர். இதன்மூலம் அதிக நபர்கள் கண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற சாதனையை ‘பிகில்’ இசைவெளியீட்டு விழா படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்தச் சாதனையை விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வைத்திருந்தது. அதனை இப்போது மீண்டும் ‘பிகில்’ விஜய் உடைத்து ‘டிஆர்பி’ மன்னன் என்ற ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.