actress vichitra
actress vichitra PT
பிக்பாஸ்

பிக்பாஸ்7: 90களில் சினிமா Entry to Doctorate படிப்பு; விச்சு என்று செல்லமாக அழைக்கப்படும் விசித்திரா

Jayashree A

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விச்சு என்று செல்லமாக அழைக்கப்படும் விசித்திரா.. இவர் அப்படி என்ன ஸ்பெஷல்!

1991-ல் சினிமா துறையில் கால் பதித்த விசித்திரா, கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமா துறையில் தனக்கான இடத்தைப் பிடித்தார். தனது திருமண வாழ்க்கைக்குப் பிறகு சினிமா துறையிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில் விஜய் டீவியின் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆனவர், தற்பொழுது பிக்பாஸில் இடம்பிடித்திருக்கிறார்.

விசித்திரா தனது குடும்பத்துடன்

பிக்பாஸில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சமயம் ”இதில் நான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால், எல்லாரிடத்திலும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று, நினைத்து வந்தேன். எனக்கு சிறு வயது முதல் படிக்கவேண்டும் என்று ஆசை ஆனால் முடியவில்லை. நான் 8வது படிக்கும் போதே நடிக்க வந்து விட்டேன். பிறகு என் படிப்பை தொடர்ந்தேன். கல்யாணத்திற்கு பிறகு படித்து டாக்டரேட் பட்டம் பெற்றேன்” என்று கூறி தனது சைக்காலஜி டாக்டரேட் முடித்த சர்டிபிகேட்டுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

அதிக விவாதம் செய்யாமல், யுகேந்திரனுக்கு தனது கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்தார்.

பிறகு ஸ்மால் பாஸ் வீட்டில் கிச்சனில் இருப்பவர்களுக்கு உதவி செய்யப்போய் அவரும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை வந்தது. அங்கு சென்றதும், தான் வயதில் மூத்தவள் என்பதால் பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் தன்னை அம்மா என்று நினைத்து, தன்னிடம் அன்பாக பழகுவார்கள் என்றும் சொல்வதைக் கேட்பார்கள் எனவும் நினைத்து, கிச்சனை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அனைவருக்கும் என்ன வேண்டுமோ அதை செய்து தந்தார். ஆனால், அது அங்கிருப்பவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்த, முதல் வாரமே பிக்பாஸிடம் சிலர் முறையிட்டனர். அதில் சில சங்கடங்களை எதிர்கொண்டார்.

அதன் பிறகு அனைவரும் தங்களின் எதிர்கால கனவுகளை சொல்லிவருகையில், ஜோவிகா தான் 9-வது வரை மட்டுமே படித்ததாகவும், அதற்கு மேல் படிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். ஜோவிகாவை தனது மகள் போல் என்று கூறி படிப்பின் முக்கியத்துவத்தை கூற இருவருக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டு, மக்களிடையே இன்றளவும் இது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதன்பிறகு பிரதீப், விசித்திராவிடம் தனது பெட்டில் காற்று வரவில்லை ஆகையால் உங்கள் பெட்டில் வந்து படுத்துக்கொள்ளவா? என்று கூறிய சமயம், பிரதீப்பை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்.

அதன் பிறகு தான் அவருக்கு, இங்கிருப்பவர்கள் வெறும் போட்டியாளார்கள் தனது உறவுகள் அல்ல.. என்பது மூளைக்குள் உரைக்க ஆரம்பித்திருக்க வேண்டும். இத்தகைய நிகழ்வுக்கு பிறகு அவர் தீவிரமாக விளையாட ஆரம்பித்ததுடன், கண்டெண்டுக்காக இப்பொழுது போட்டியாளர்களுக்குள் ஒருவராக தானும் அவ்வப்பொழுது விவாதத்திலேயும் இறங்கி வருகிறார்.

மன உறுதியை சோதிக்க நடந்த ’ஆரியமாலா..’ டாஸ்கில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்று தன்னாலும் முடியும் என்ற செய்தியை உடனிருந்த போட்டியாளருக்கு அறிந்துக்கொள்ள செய்தார்.

இவரை பற்றி எதற்கு என்று யோசிப்பவர்களுக்கான கண்டெண்ட் இது, பெண்களுக்கு சினிமாதுறை குறிப்பாக, நடிகை என்றால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதிலும் விசித்திரா போன்ற துணை நடிகைகள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் மிக மிக அதிகம். அதை உடைத்து தனக்கென ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டு, அதிலும் வெற்றி பெற்று வாழ்வதென்பது, வேற லெவல். அத்தகைய வாழ்க்கையைதான் விசித்திரா ஏற்படுத்திக்கொண்டு அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார். அத்துடன் விடாமல் தனது படிப்பாசையை நிறைவேற்றும் பொருட்டு டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

பிக்பாஸில் இவர் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் பல பெண்களுக்கு முன் உதாரணமாக திகழும் இவர், பிக்பாஸின் ஆரம்பத்தில் கூறியபடி, மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டுவிட்டார் என்பதில் சந்தேகமே இல்லை.