bigg boss 10 x page
சினிமா

பிக்பாஸ் 10 | முதல் கேப்டனாக ஷாதிகா.. அரசியல் சூடுபிடித்த Democracy Room!

பிக்பாஸ் 10 சீசனில் 19 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், முதல் நாளிலேயே கேப்டன்சி போட்டி, கருத்து வேறுபாடுகள், புதிய விதிமுறைகள் என வீடு பரபரப்பாகியுள்ளது.

Johnson

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 ஆரம்பித்த வேகத்திலேயே, “இந்த சீசன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கப் போகிறது” என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. 19 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், முதல் நாளிலேயே கேப்டன்சி போட்டி, கருத்து வேறுபாடுகள், புதிய விதிமுறைகள் என வீடு பரபரப்பாகியுள்ளது. ஆனால் இந்த சீசனின் மிகப்பெரிய சுவாரஸ்யம் போட்டியாளர்களிடம் மட்டுமல்ல… அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதில்தான். சீசன் 10-ன் முதல் கேப்டன்சி டாஸ்க்கில் ஷாதிகா மற்றும் வினோத் பாபு மோதினர். பரபரப்பான போட்டியின் முடிவில் ஷாதிகா முதல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். ஒரு பக்கம் கேப்டன் பதவி கிடைத்த மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் அந்தப் பதவியுடன் வரும் பொறுப்பு. குறிப்பாக, வீட்டில் யாருக்கு என்ன பொறுப்பு? யாருடைய செயல்பாடு சரி? யாரை முன்னிலைப்படுத்துவது? போன்ற முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் ஷாதிகாவுக்கு உருவாகியுள்ளது. அதுதான் அடுத்தடுத்து பிரச்னைகளுக்கும் காரணமாகிறது.

போட்டியாளர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தபோது, தினமும் இரண்டு பேரைத் தேர்வு செய்வதற்கான அடிப்படை என்ன என்பது குறித்து கேப்டன் ஷாதிகாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. கேள்வி சாதாரணமாக ஆரம்பித்தாலும், விவாதம் சூடுபிடித்தது. “உங்கள் பிரச்னையை முடித்துக்கொண்டு என்னை அழையுங்கள்” என்று கூறிவிட்டு ஷாதிகா அங்கிருந்து கோபமாக விலகிச் சென்றுள்ளார். இதையடுத்து ஜேசன் கௌஷி தனது கருத்தை வெளிப்படையாக முன்வைத்து கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இரண்டே நாட்களில் உருவான இந்த மோதல், வரும் நாட்களில் போட்டியாளர்களுக்கு இடையேயான உறவுகள் எந்த அளவுக்கு மாறக்கூடும் என்பதற்கான முதல் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. சீசன் 10-ன் மிகப்பெரிய புதுமைகளில் ஒன்றாக அறிமுகமாகியுள்ளது ‘Democracy Room’. வீட்டில் முடிவெடுக்கும் அதிகாரம், குழு செயல்பாடு மற்றும் போட்டியாளர்களின் தலைமைத்துவ திறனை சோதிக்கும் வகையில் இந்த புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுகத்துடன் போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து செயல்படும் சூழலும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு அணிகளாகப் பிரித்து நடத்தப்பட்ட ’சட்டமன்றம்’ டாஸ்க் கவனம் ஈர்த்தது.

இந்த டாஸ்க்கில் ஷத்திகா தலைமையில் ஆளும் அணியும், மற்றொரு தரப்பில் எதிரணியும் உருவாக்கப்பட்டன. சாதாரணமாக விளையாட்டு, நட்பு, தனிப்பட்ட கருத்து என நகர வேண்டிய பிக் பாஸ் வீடு, இந்த டாஸ்க்கில் முழுமையான அரசியல் அரங்கமாகவே மாறியது. ’Democracy Room’ என அமைக்கப்பட்ட இடத்தில் போட்டியாளர்கள் தங்களுடைய கருத்துகளை முன்வைக்க, கேள்வி–பதில் மற்றும் குற்றச்சாட்டுகள் மூலம் விவாதம் சூடுபிடித்தது. யார் தலைமை ஏற்க வேண்டும், யாருடைய முடிவு சரி, யார் விதிகளை மீறுகிறார் என்பதெல்லாம் விவாதத்துக்கு வந்தது. இதில் குறிப்பாக முனியம்மாவுக்கும் ஷத்திகாவுக்கும் இடையிலான கருத்து மோதல் கவனம் பெற்றது. ஷத்திகா தலைமையிலான முறையை முனியம்மா விமர்சித்த நிலையில், இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. விவாதம் ஒரு கட்டத்தில் தீவிரமடைந்த நிலையில், முனியம்மா ’வெளிநடப்பு’ செய்வதாகக் கூறி Democracy Room-லிருந்து வெளியேறியது இந்த டாஸ்க்கின் முக்கியமான தருணமாக அமைந்தது.

இதனால் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் கவனம் பெற்றிருந்த முனியம்மா மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். மேலும், முதல் நாட்களிலேயே முனியம்மா தொடர்பான கருத்து வேறுபாடுகள் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டு வருகின்றன. அவரை இரண்டாவது நாளிலேயே நாமினேஷனில் தேர்வு செய்திருப்பதும் பரபரப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேப்டன்சி டாஸ்க் கொடுக்கும் முன்பு, "தனிமனிதன் மன்னராட்சியை மாற்றி ஜனநாயகபூர்மாக மாறியது தான் ஜனநாயகத்தின் துவக்கமாக இருந்தது" என பிக்பாஸ் பேசியதன் மூலம் Democracy என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒன்றாக மாறி இருக்கிறது. அது மக்களும் சென்று சேரும் வகையில் நிகழ்ச்சியில் பிரதிபலிக்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் கேப்டன் பதவி என்பது அதிகாரத்தைக் காட்டுவதற்கான இடம் மட்டுமல்ல. அதே நேரத்தில், அந்த அதிகாரத்தை மற்றவர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதும் முக்கியம். ஷாதிகாவின் முடிவுகளை சிலர் ஏற்றுக்கொள்ள, சிலர் கேள்வி எழுப்பத் தொடங்கியிருப்பது வீட்டிற்குள் எதிரணிகள் உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜேசன் கௌஷி தனது கருத்தை வெளிப்படையாக முன்வைத்திருப்பது, அவர் இனி அமைதியாக விளையாடப் போவதில்லை என்பதற்கான சிக்னலாக இருக்கலாம்.

பிக்பாஸ் போட்டியில் ஆரம்ப நாட்களில் உருவாகும் நட்பு, ஆதரவு, கருத்து வேறுபாடு ஆகியவை பின்னர் மிகப்பெரிய கூட்டணிகளாக மாறுவது வழக்கம். சீசன் 10-லும் அதற்கான ஆரம்ப அறிகுறிகள் ஏற்கெனவே தென்படுகின்றன. யார் கேப்டனின் பக்கம்? யார் எதிரணியை உருவாக்கப் போகிறார்கள்? யார் தனியாக விளையாடப் போகிறார்கள்? என்பதற்கான பதில்கள் அடுத்தடுத்த எபிசோடுகளில் வெளிவரலாம்.

பொதுவாக பிக்பாஸ் வீடு சூடுபிடிக்க சில நாட்கள் ஆகும். ஆனால் சீசன் 10-ல் முதல் சில நாட்களிலேயே போட்டி, அதிகாரம், கருத்து மோதல் என ஆட்டம் வேகமெடுத்துள்ளது. முதல் கேப்டனாக ஷாதிகா தேர்வு செய்யப்பட்டிருப்பதும், அதே நேரத்தில் அவரது முடிவுகள் குறித்து வீட்டுக்குள் கேள்விகள் எழுந்திருப்பதும், இந்த சீசனின் ஆரம்ப அரசியலை தெளிவாக காட்டுகிறது. அதற்கு மேலாக ‘Democracy Room’ என்ற புதிய அம்சம் அறிமுகமாகியிருப்பதால், இனி பிக்பாஸ் வீடு வெறும் போட்டி நடக்கும் இடமாக இல்லாமல், யார் முடிவெடுக்கிறார்கள், யார் அந்த முடிவை எதிர்க்கிறார்கள், யார் யாரை தங்களுடன் சேர்த்துக்கொள்கிறார்கள் என்ற அதிகார விளையாட்டாக மாறப்போகிறது. சீசன் 10 தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் கருத்து மோதல்கள் உருவாகி இருப்பதால், இந்த ’சட்டமன்றம்’ டாஸ்க் அடுத்தடுத்த நாட்களில் உருவாகப்போகும் அணிகள் மற்றும் கூட்டணிகளுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. வெறும் டாஸ்க்காக தொடங்கிய ’ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சி’ போட்டி, போட்டியாளர்களின் உண்மையான குணங்களையும் அவர்களுடைய தலைமைத்துவ திறனையும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் இந்த அரசியல் விளையாட்டு, இனி நட்பை உருவாக்குமா அல்லது புதிய பகையை உருவாக்குமா என்பதுதான் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு. சீசன் 10-ன் உண்மையான ஆட்டம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது