நடிகை பாவனா திருமணத்துக்கு ’பத்மாவத்’ தீபிகா படுகோன் ஸ்டைலில் மேக்கப் போடப்பட்டதாக, பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் ரெஞ்சு ரெஞ்சிமர் தெரிவித்தார்.
நடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் திருமணம் கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று நடைபெற்றது. எளிமையான முறையில் நடந்த இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பாவனாவிற்கு ப்ரியங்கா சோப்ரா உட்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். திருமணத்தின் போது பாவனாவில் மேக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதுபற்றி அவருக்கு மேக்கப் போட்ட, திருநங்கை ரெஞ்சு ரெஞ்சிமர் கூறும்போது, ‘பத்மாவத் படத்தில் தீபிகா படுகோனுக்கு எப்படி மேக்கப் போடப்பட்டதோ, அதை மனதில் வைத்தே மேக்கப் போட்டேன். பழங்கால முறையிலான பாரம்பரிய நகைகளும் அணிவிக்கப்பட்டது. கழுத்தில் அணிந்திருந்த செயினில் கலைநயத்தோடு கூடிய கணபதி சிலையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர் அணிந்திருந்த தங்க நிற சேலை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது’ என்றார்.