சினிமா

’சினிமாவே வேண்டாம் என நினைத்தேன்...’: மனம் திறந்தார் பாவனா!

webteam

சினிமாவே வேண்டாம் என்று அதில் இருந்து ஒதுங்கிவிடலாம் என நினைத்தேன் என்று நடிகை பாவனா தெரிவித்துள்ளார். 

தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்தவர் நவீன். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பல வருடங்களாகக் காதலித்து வந்தனர். பின் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத் துக்குப் பிறகு தமிழில் வெளியான ’96’ படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பாவனா கூறியிருப்பதாவது:

என் வாழ்க்கையில் தோழிகளுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. டிவி தொகுப்பாளினி ஷில்பா பாலா, என் நெருங்கிய தோழி. நடிகை ரம்யா நம்பீசன், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். அப்போதிருந்தே அவர் என் தோழி. அவர் குடும்பம் என் குடும்பம் போன்றது. அவரைப் போலவே மிருதுளா, சயனோரா, ஷஃப்னா, சரிதா, சம்யுக்தா வர்மா, மஞ்சு வாரியர், கீது மோகன்தாஸ், பூர்ணிமா இந்திரஜித்... என்று என் நட்பு வட்டம் பெரியது.

என் கணவர் நவீனைச் சந்தித்தது பற்றி கேட்கிறீர்கள். கன்னடத்தில் எனது மூன்றாவது படம், ‘ரோமியோ’ . அந்தப் படத்தின் செட்டில்தான் முதன்முறையாக அவரை சந்தித்தேன். அப்போது எனக்கு கன்னடம் சரியாகத் தெரியாது. இருந்தாலும் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருப் போம். தொடர்ந்து நட்பானோம். பிறகு காதலித்தோம். என் அம்மா, சம்மதம் தெரிவித்தார். அப்பா, மலையாளி இல்லாத இன்னொருவரை திருமணம் செய்துகொள்ள யோசித்தார். பிறகு ஒப்புக்கொண்டார்.

எனது ஆரம்ப காலகட்டம் பற்றி கேட்கிறீர்கள். சினிமாவுக்கு வந்த முதல் இரண்டு வருடம் பிசியாகவே இருந்தேன். ஆனால் இரண்டாவது ஹீரோயின் கேரக்டர்தான் அதிகம் கிடைத்தது. என்னை அப்படித்தான் அடையாளப்படுத்தினார்கள். இதனால் மன வேதனை அடைந்தேன். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி விடலாமா என நினைத்தேன். பிறகுதான் தமிழில் வாய்ப்புக் கிடைத்தது. ஹீரோயின் ஆனேன். என் வாழ்க்கை மாறியது.
இவ்வாறு பாவனா கூறினார்.