மலையாள திரையுலகில் முன்னணி நடிகரும், இந்திய சினிமாவில் முக்கியமான ஆளுமையான மம்மூட்டி குறித்து இயக்குநரும், நடிகருமான பேசில் ஜோசப் பகிர்ந்துள்ள பதிவு பேசு பொருளாகியுள்ளது. அந்த சந்திப்பில் நடந்த விஷயங்களையும், மம்மூட்டியின் பண்பையும் பற்றி நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் எழுதியுள்ளார்.
பேசிலின் அப்பதிவில், "ஒரு லெஜெண்ட்டுடன் மாலை நேரத்தை செலவிடும் அரிய பாக்கியம் கிடைத்தது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான, மென்மையான, சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை கொடுத்தது. எங்கள் குடும்பம் என்றென்றும் போற்றும் தருணம். இந்த சந்திப்பில், என் மகள் வெள்ளந்தியாக மம்மூட்டியை பார்த்து, "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டபோது, அவர் புன்னகைத்து, "மம்மூட்டி" என்றார். அந்த அடக்கமான பதில் வாழ்நாள் முழுவதும் ஒரு முக்கிய நினைவாக எங்கள் இதயங்களில் பதிந்தது.
அவர் தனது சொந்த கேமராவில் படங்களை எடுத்தார், மேலும் ஹோப்பியும் (பேசிலின் மகள்) மம்மூக்காவும் எண்ணற்ற செல்ஃபிகளை ஒன்றாக எடுத்துக் கொண்டனர். சில மணிநேரம், இந்த உலகிற்கு அவர் யார் என்பதை எங்களை மறக்கச் செய்து, நாங்கள் ஒரு நெருங்கிய நண்பருடன் அமர்ந்திருப்பது போல் உணர வைத்தார். அந்த வகையான கருணை மற்றும் அரவணைப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. மம்மூக்கா, உங்கள் கருணை, அரவணைப்பு மற்றும் நாங்கள் என்றென்றும் பொக்கிஷமாக வைத்திருக்கும் ஒரு மாலை நேரத்தை எங்களுக்கு வழங்கியதற்கு எங்கள் மனதின் அடியாழத்தில் இருந்து நன்றி." எனக் குறிப்பிட்டுள்ளார்.