தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தனது பெயர், குரல், புகைப்படங்கள் உள்ளிட்ட அடையாளங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஹைதராபாத் சிவில் நீதிமன்றம், சிரஞ்சீவியின் அடையாளங்களை தவறாக பயன்படுத்த இடைக்காலத்தடை விதித்துள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 27 அன்று மீண்டும் விசாரிக்கப்படும்.
இந்திய சினிமாவின் பல பிரபலங்கள் அண்மை காலமாக தங்கள் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை இணையத்தில் பயன்படுத்த தடைவிதிக்க கோரி நீதி மன்றத்தை நாடி வருகின்றனர். அதில் இப்போது இணைந்திருப்பது தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.
செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்காலத்தில் வரக் கூடிய டிஜிட்டல் வடிவங்கள் உட்பட எதுவும் தனது அடையாளம் மற்றும் புகழை தவறாகவோ, வர்த்தக ரீதியாகவோ அனுமதி இன்றி பயன்படுத்துவதற்கு எதிராக அவசர தடை கோரி சிரஞ்சீவி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஹைதராபாத் சிவில் நீதிமன்றம், சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படங்கள் உட்பட அவரது அடையாளங்களை அனுமதியின்றி பயன்படுத்த இடைக்காலத்தடை விதித்துள்ளது. 'மெகா ஸ்டார்', 'சிரு', 'அன்னய்யா', 'பாஸ்' மற்றும் 'மெகா ஸ்டார் சிரு' போன்ற தலைப்புகளும் இந்த உத்தரவில் அடங்கும். அவை அவரது அடையாளங்களாகவே கருதப்படும். இவற்றை பிறர் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உண்டு. மேலும் இந்த வழக்கு அடுத்ததாக அக்டோபர் 27 அன்று விசாரிக்கப்பட உள்ளது.
நாகார்ஜுனா, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், கரண் ஜோஹர் மற்றும் அக்ஷய் குமார் போன்ற பிரபல திரைப்பட பிரபலங்களும் இவ்வாறு தங்கள் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வழக்கு தொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.