சினிமா

பாகுபலிக்கு ஒரு கட்டப்பான்னா! ராக்கி பாய்க்கு ஒரு ‘வானரம்’- மிரள வைத்த கே.ஜி.எஃப்-ன் தளபதி

rajakannan

வானரம் கையிலும் துப்பாக்கி இருக்கும். எதிரே சுடக் கூடிய தூரத்தில் ராக்கி பாய் நின்று கொண்டிருப்பான். சுற்றிலும் உள்ள கே.ஜி.எஃப் தொழிலாளர்கள் அனைவரும் கைகளில் துப்பாக்கி இருந்தாலும் பயத்துடன் வானரத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். எங்கு ராக்கி பாயை வானரம் சுட்டுவிடுவானோ என நெஞ்சில் திகிலுடன் இருப்பார்கள். ஏனெனில் வானரத்தின் முதலாளியான கருடனை வெட்டி சாய்த்தவன் ராக்கி பாய். வானரத்தின் கைகளில் இருந்த துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்தது. ஆனால், அது ராக்கி பாய் மீது அல்ல, அவன் பின்னால் இருந்த குறி வைக்கும் போர்டின்மீது.

எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். வானரம் ஏன் கையில் துப்பாக்கி கிடைத்தும் ராக்கி பாயை சுடவில்லை. அதற்கு ஒரே ஒரு காரணம் தான். அதற்கு முந்தைய காட்சியில் ராக்கி பாய் அவனிடம் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான். ‘இங்கே க்ரீடம் தான் நிரந்தரம்.. தலைகள் மாறிக் கொண்டே இருக்கும்’.. இதுதான் அந்த வார்த்தை. அதாவது கே.ஜி.எஃப்க்கு தலைவன்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இடம் இங்கே தான் இருக்கும். முத்தாய்ப்பாய் சொன்னால் விஸ்வாசம் நாட்டிற்கு தான்.. மன்னனுக்கு அல்ல. இதுதான் வானரம் மனது மாற காரணம்.

வானரத்தின் இந்த கதாபாத்திரத்தை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது, அல்லவா! வேறெங்கும் இல்லை. நம்முடைய பாகுபலியில் தான். ஆமாம். மகிழ்மதிக்கு எப்படி ஒரு கட்டப்பாவோ.. அதேபோல் தான் நராச்சிக்கு ஒரு வானரம். கட்டப்பா எப்படி அரசர்கள் மாறினாலும் மகிழ்மதிக்கு விஸ்வாசமாக தொடர்ந்து இருக்கிறாரோ அதனை உணர்ந்து தான் ராக்கி பாய்க்கு விஸ்வாசமாக மாறினார் வானரம். ஒரு சிறந்த வீரரான படைகளை தயார் செய்வதும் பாதுகாப்பில் சூரராக எப்படி கட்டப்பா இருந்தாரோ அப்படித்தான் வானரமும். ஒட்டுமொத்த கே.ஜி.எஃப்-ன் கட்டுப்பாடும் வானத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.

கே.ஜி.எஃப் -2ல் முக்கியமான காட்சி ஒன்று வரும். ஒரு புலி, ஆட்டை வேட்டையாடுவது போன்ற ஒரு ஓவியத்தை சிறுவர்கள் சுவற்றில் வரைந்து இருப்பார்கள். அந்த சிறுவர்களை அழைத்து, ‘புலி இப்படி வேட்டை ஆடாது; பதுங்கி பாய்ந்து நேராக ஆட்டின் கழுத்தை கவ்விப் பிடிக்கும். கழுத்தை பிடித்தால் தான் உடலின் எந்த பாகமும் செயல்படாது’ என்று வானரம் கூறும் காட்சி உண்மையில் மிகவும் மிரட்டலாக இருக்கும். க்ளைமேக்ஸில் நீங்கள் நன்றாக கவனித்தால் தெரியும் ராக்கி பாய் ஆதிராவை அதேபோல் கழுத்தை நெறித்துதான் கொல்வான். அதுமட்டுமல்ல, வானரமும் ஆன்ரூரை கழுத்தை நெறித்துதான் கொல்வார்.

ஒரு திரைப்படம் என்பது காவியமாக, க்ளாசிக் சினிமாவாக மாறுகிறது என்றால் அந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் ஏன் வில்லனையும் தாண்டி அந்த படத்தில் நடித்த பல கதாபாத்திரங்கள் மனசில் நிற்கும் போது தான். கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாய்க்கு அடுத்து ஆதிரா, ரமிமா சென், பத்திரிக்கையாளர் இளவழகன் என பலரும் மனதில் நீங்காமல் நிற்பார்கள். அப்படித்தான் இந்த வானரமும்.

உணர்வு பூர்வமான தாய்ப்பாசம், சிறப்பான நான் லீனியர் எடிட்டிங், மிரள வைக்கும் பின்னணி இசை, தரமான தமிழ் டப்பிங், காட்சிக்கு காட்சி மாஸ் என கே.ஜி.எஃப் இரண்டாம் பாகமும் வெற்றி அடைய முக்கியமான காரணங்கள் பல இருந்தாலும் துணை கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களது மிரட்டலான நடிப்பால் படத்திற்கு தூணாக நின்றதும் முக்கியமான காரணம் தான்.

பாகுபலியின் கட்டப்பாவைப் போல், கே.ஜி.எஃப்-ன் வானரமும் ரசிகர்களின் மனதில் இடம்பெற்று இருப்பார்.