'BAD GIRL' பட இயக்குநர் வர்ஷா பரத் web
சினிமா

”கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது பெண்களின் வேலை அல்ல..” - 'BAD GIRL' பட இயக்குநர் வர்ஷா பரத்

'BAD GIRL' பட இயக்குநர் வர்ஷா பரத் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது பெண்களின் வேலை அல்ல என்று பேசியுள்ளார்.

Rishan Vengai

வெற்றிமாறன் தயாரிப்பில் இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’BAD GIRL' படத்தின் டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்திருக்கும் இயக்குநர் வர்ஷா பரத் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது பெண்களின் வேலை அல்ல என்று பேசியுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் Bad Girl. இயக்குநர் வர்ஷா பரத் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இத்திரைப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.

அஞ்சலி சிவராமன், டீஜெ போன்றோர் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெளியானது. டீசர் வெளியானதில் இருந்து அப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள், இயக்குநரின் சர்ச்சைக்குரிய பேச்சு என ஒட்டுமொத்த எதிர்ப்பையும் இப்படம் கண்டது. தணிக்கை சான்று பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக சர்ச்சை வெளியானது.

பேட் கேர்ள்

பெரிய சர்ச்சைகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு Bad Girl திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்கில் வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் பங்கேற்றனர்.

கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது பெண்கள் வேலை அல்ல..

Bad Girl படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் வெற்றிமாறன், திரைப்பட இயக்குநர் வர்ஷா பரத், இயக்குநர் மிஸ்கின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய படத்தின் இயக்குநர் வர்ஷா பரத், “Bad Girl படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோது பலரும் இப்படத்தை குப்பை படம் என்றும், கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், ரோட்டர்டாம் திரைப்படத் திருவிழாவில் Bad Girl படத்தை பார்த்துவிட்டு எல்லோரும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அது என்னுடைய நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

நமது ஊரில் மண்ணையும் பெண்ணையும் மதிக்க வேண்டும் என்று சொல்பவர்கள்தான், இந்த படத்தை தயாரித்த, ட்ரெய்லரை ரிலீஸ் செய்தவர்களின் வீட்டு பெண்களின் புகைப்படத்தை மிகவும் கேவலமாக இணையத்தில் பகிர்ந்திருந்தார்கள். இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் அவர்களின் அரசியல் நிலைப்பாடு எப்படிப்பட்டது என்று. அவர்கள் உண்மையிலேயே மனநிலை சரியில்லாதவர்கள்.

பலரும் கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். கலாச்சாரம்தான் பெண்களை பாதுகாக்க வேண்டுமே தவிர, பெண்கள் கலாச்சாரத்தை பாதுக்காக்க வேண்டிய அவசியம் இல்லை. கலாச்சாரத்தை காக்க வேண்டிய வேலை எங்களுடையது அல்ல. கடவுளும் கலாச்சாரமும் தான் பெண்களை காக்க வேண்டும்” என்று பேசினார்.