கர்நாடகாவில் ’பாகுபலி 2’ படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்றால் அதில் கட்டப்பாவாக நடித்துள்ள சத்யராஜ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷா, சத்யராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பாகுபலி’. இதன் இரண்டாம் பாகம் வரும் 28-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டேம் என கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எனக் கூறியுள்ளார். அவருடன் இன்னும் சில கன்னட அமைப்புகளும் சேர்ந்துள்ளன. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவை எதிர்த்து சத்யராஜ் பேசியதுதானாம்.
’பாகுபலி 2 படத்துக்கு நாங்கள் எதிரி அல்ல. ஆனால், சத்யராஜ் காவிரி பிரச்னையின் போது எங்களை அவமானப்படுத்திவிட்டார். அது கண்டனத்துக்குரியது. இதனால் மாநிலம் முழுவதும் அந்தப் படத்தை வெளியிட தடை செய்துள்ளோம். ஏப்ரல் 28-ம் தேதி சத்யராஜுக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்’ என்று வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
இவர், ஏற்கனவே காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி ரஜினியின் கபாலி பட ரிலீசின் போதும் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.