Avengers: Doomsday Robert Downey Jr.
சினிமா

Avengers Endgame படத்தில் காட்சிகள் leak? லோகி, ஹல்க், 3,000 யுனிவர்ஸ்கள்; Doomsday ரகசியம் இதுதானா?

Endgame: Encore லீக் காட்சிகள் Doomsday இணைப்பா? டாக்டர் டூம்–ஹல்க் சந்திப்பு, 3,000 பிரபஞ்ச அழிவு விவாதம் சூடு பிடிக்கிறது

PT WEB

செய்தியாளர் - M.மீரா

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் Avengers: Endgame: Encore” திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே படத்தின் புதிய காட்சிகள் எனக் கூறப்படும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளன. குறிப்பாக, இந்தக் காட்சிகள் அடுத்ததாக வெளியாகவுள்ள “Avengers: Doomsday” படத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.

avengers

எனினும், இணையத்தில் வெளியாகியுள்ள இந்தக் காட்சிகள் doomsday படத்தில் உள்ள காட்சிகள் தானா என்று உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில், அவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க மார்வெல் முயற்சிப்பதாக கூறப்படுவது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

லீக் ஆனதாக கூறப்படும் ஒரு காட்சியில் டாக்டர் டூம், புரூஸ் பேனரை சந்தித்து தன்னுடன் இணைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும், அதன் பின்னர் புரூஸ் பேனர் Hulk ஆக மாறுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் காட்சி உண்மையானதாக இருந்தால்,Avengers: Doomsday படத்தில் மார்க் ரஃபலோ மீண்டும் Hulk கதாபாத்திரத்தில் தோன்றுவதற்கான முக்கிய முன்னோட்டமாக இது அமையலாம். சமீபத்தில் வெளியான Spider-Man: Brand New Day படத்திலும் ரஃபலோ இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், டாக்டர் டூம் தனது சொந்த முகமூடியை உருவாக்கும் காட்சியும் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் காட்சி, Iron Man படத்தில் டோனி ஸ்டார்க் தனது முதல் சூட் மற்றும் ஹெல்மெட்டை உருவாக்கிய காட்சியை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது.

Avengers endgame

மற்றொரு முக்கியமானதாக கூறப்படும் காட்சியில் பல பிரபஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதையும், டைம்லைன்கள் அழிவதையும் பார்த்து அதிர்ச்சியடையும் காட்சியும் இருப்பதாக கூறப்படுகிறது.

3,000 பிரபஞ்சங்கள் அழிக்கப்படுவதாக காட்டப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், Endgame படத்தில் டோனி ஸ்டார்க் கூறும் பிரபலமான “I love you 3,000” வசனத்துடன் இந்த எண்ணிக்கை தொடர்புபடுத்தப்படுகிறது.

இதற்கிடையில், Endgame இயக்குநர்களான Russo brothers, Anthony Russo மற்ரும் Joe Russo , 2019-ல் படம் வெளியானபோது ரசிகர்களுடன் திரையரங்கில் அமர்ந்து படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

மீண்டும் Endgame: Encore படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, திரையரங்கில் Endgame படத்தை இதுவரை பார்க்காத புதிய தலைமுறை ரசிகர்களின் அனுபவத்தை நேரில் கேட்க விரும்புவதாக கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், புதிய காட்சிகள் தொடர்பான Spoiler களை வெளியிட வேண்டாம் என்றும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செப்டம்பர் 25-ம் தேதி IMAX உள்ளிட்ட பிரீமியம் திரையரங்குகளில் வெளியாகும் Endgame: Encore, புதிய போஸ்ட்-கிரெடிட்ஸ் காட்சிகள் மூலம் Avengers: Doomsday படத்துக்கான இணைப்புகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ராபர்ட் டவுனி ஜூனியர், டோனி ஸ்டார்க்காக அல்லாமல் விக்டர் வான் டூம் (Victor von Doom) கதாபாத்திரத்தில் மீண்டும் MCU-க்கு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.