சினிமா

இந்தியாவில் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் வசூலை முறியடிக்காத ‘அவதார் 2’ - முதல்நாள் நிலவரம் என்ன?

சங்கீதா

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார் 2’ திரைப்படத்தின் முதல் நாள் நிலவரம் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவான ‘டைட்டானிக்’, ‘அவதார்’ படங்கள் உலக அளவில் நல்ல வரவேற்புப் பெற்று வசூல் சாதனையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் ‘அவதார்’ படத்தின் சீக்குவல் 5 பாகங்களாக உருவாகும் என்று ஜேம்ஸ் கேமரூன் அறிவித்த நிலையில், நேற்று இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது.

விஷுவல் ட்ரீட்டாக ‘அவதார் 2’ படம் இருப்பதாக கூறப்பட்டாலும், வலுவான கதை மற்றும் மெதுவாக நகரும் திரைக்கதையால் படத்திற்கான வரவேற்பு சற்று குறைந்தே காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால், குழந்தைகள் திரையரங்கிற்கு வருவது குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 38 முதல் 40 கோடி ரூபாய் வரை இந்தப் படம் வசூலித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்திற்குப் பிறகு இந்தியாவில் முதல் நாளில் அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அவெஞ்சர்ஸ் படம் முதல் நாளில் ரூ.53.10 கோடியை வசூலித்தது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தின் முதல் நாள் வசூலை இந்தியாவில் முறியடிக்க முடியாவிட்டாலும், ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ (ரூ. 31 கோடி) மற்றும் ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ (ரூ. 32 கோடி) ஆகியப் படங்களின் வசூலை முறியடித்துள்ளது ‘அவதார் 2’.

இதில் தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் இருந்து மட்டும் ரூ.22 கோடியும் , பிற பகுதிகளில் ரூ.18 கோடியும் வசூலாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பட விநியோகத்தில் சதவிகித அடிப்படையில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. ஆனால் தற்போது இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளதால், கூடுதலாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்படுவதால் வரும் நாட்களில் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.