புகழ் பெற்ற ஜமீனையும், பழமையான சொரி முத்து அய்யனார் கோவிலையும் அவன்-இவன் படத்தில் அவதூறாக காட்டியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, நடிகர் ஆர்யா உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்
தென்மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜமீன்களில் சிங்கம் பட்டி ஜமீனும் ஒன்று. காரையாறில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் சிங்கம்பட்டி சமஸ்தானத்துக்கு உட்பட்டது. நெல்லை மாவட்ட மக்கள் அதை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் ஆடி, அம்மாவசை திருவிழாவின் போது 5 லட்சம் பேர் கூடுவார்கள். அன்று தற்போதைய ஜமீன்தாரருமான முருகதாஸ் தீர்த்தபதி ராஜா, ராஜ உடையில் தரிசனம் வழங்குவார். இதுபோன்ற விழா தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடையாது.
இப்படி இருக்கையில் புகழ் பெற்ற ஜமீனையும், பழமையான சொரி முத்து அய்யனார் கோவிலையும் அவன்-இவன் படத்தில் அவதூறாக காட்டியுள்ளனர். படத்தில் ஜமீன் தீர்த்தபதி என்று ஒரு கிராமத்தை காட்டுகிறார்கள். அங்கு தீர்த்தபதி என்று கேரக்டரை உருவாக்கி அவர் குடிப்பது போன்றும், சுற்றுலா விடுதியில் சண்டை போடுவது போன்றும், இறுதியில் அவரை நிர்வாணமாக்கி விட்டு பொது மக்கள் அடிப்பது போன்றும் காட்சி உள்ளது. மற்றொரு காட்சியில் சொரிமுத்து என்ற ஒரு கேரக்டரை உருவாக்கி இந்த கோயிலை நம்பிதான் நீங்கள் வாழ்ந்தி்ட்டு இருங்கிறீங்க என்ற வசனம் வருகிறது. இது எங்களை இழிவு படுத்தும் விதமாக உள்ளது எனவே படத்தின் இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாளையங்கோட்டையை சேர்ந்த முத்துராமன் என்பவர் அம்பாசமுத்திரம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், முத்துராமன் என்பவர் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு அடிப்படை ஆதாரமற்றது. சுய விளம்பரத்திற்காக தொடரப்பட்டது எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் ஆர்யா உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது .