உருவ கேலி செய்த தொகுப்பாளருக்கு அட்லீ கொடுத்த பதிலடிதான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
திறமையை வைத்து ஒருவரை மதிப்பீடு செய்யாமல், உருவத்தை வைத்து மதிப்பீடு செய்யப்படும் போக்கு மிகவும் கீழ்த்தரமானது. சில ஆண்டுகளுக்கு முன்னர், தனுஷை நிறவெறியுடன் வட இந்திய வெப் சீரிஸ் ஒன்றில் நக்கலடித்து இருப்பார்கள். தற்போது, அட்லீக்கும் இது நடந்திருப்பது தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து 2016ல் வெளியான படம் `தெறி'. இப்படம் ஏற்கெனவே சில மொழிகளில் ரீமேக் ஆகியிருக்கிறது. இப்போது இந்தியில் ரீமேக் ஆகி டிசம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை அட்லீ தயாரிக்க, காலீஸ் இயக்கி, வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா காபி, ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்வுகள் பரபரப்பாக நடந்து வருவதையும், அட்லீயே பல இடங்களில் சென்று படத்தை விளம்பரப்படுத்துவதையும் பார்க்க முடிந்தது. அப்படி ஒரு புரமோஷன் நிகழ்வாக, தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் படக்குழுவுடன் அட்லீயும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொகுப்பாளர்,"நீங்கள் ஏதாவது ஸ்டாரை சந்திக்க செல்லும் போது, அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா?" என அட்லீயின் உருவத்தை கேலி செய்யும் தொனியில் கேள்வியை கேட்க அதற்கு கூலாக பதில் சொன்னார் அட்லீ.
நான் ஏ ஆர் முருகதாஸ் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். அவர் தான் என்னுடைய முதல் படத்தை தயாரித்தார். அவர் என்னிடம் ஸ்க்ரிப்ட்டை தான் கேட்டார். மாறாக அவர் என் தோற்றத்தை பார்க்கவில்லை. நான் கதை சொன்ன விதம் அவருக்குப் பிடித்திருந்தது. இந்த உலகமும் ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை முடிவு செய்யக் கூடாது, அவரின் மனதை பொறுத்து முடிவு செய்ய வேண்டும்" எனக் கூறியிருக்கிறார். ஒரு பக்கம் அந்த தொகுப்பாளரின் கேள்வி சர்சசைக்குள்ளானாலும், இன்னொரு புறம், அட்லீயின் இந்த பதில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.