கிருஷ்ணகிரி வனப்பகுதியில் வசிக்கும் இளைஞர் முருகன் (கலையரசன்). வனத்துறையில் பாதுகாவலராக பணியாற்றும் அவர் எப்படியாவது தன் வேலை நிரந்தரம் ஆகிவிட வேண்டும் என தீவிரமாக முயற்சிக்கிறார். அப்படி நிலையான வேலை கிடைத்தால்தான், அவர் காதலிக்கும் ப்ரியாவை (வின்சு ராம்) கரம்பிடிக்க முடியும். முருகனின் அண்ணன் சடையன் (தினேஷ்) உள்ளூர் மக்களின் உரிமைகளுக்காக போராடும் நபர். உள்ளூர் முதலாளிகளின் அராஜகத்துக்கு எதிராக போராடும் சடையனின் ஒரு செயல், முருகனின் பணி நிரந்தரத்திற்கு தடையாக வர, வனத்துறை வேலை கிடைக்காது என்ற சூழல் உண்டாகிறது. எனவே இருக்கும் நிலத்தை எல்லாம் விற்று தனியார் ராணுவ பயிற்சி பள்ளிக்கு அனுப்பப்படுகிறார் முருகன். எப்படியாவது ராணுவ வீரராகதான் திரும்ப வேண்டும் என செல்லும் முருகனின் நோக்கம் நிறைவேறியதா? உள்ளூரில் இருக்கும் முதலாளிகளின் அநீதிகளை சடையன் அடக்கினாரா? என்பதை எல்லாம் சொல்கிறது `தண்டகாரண்யம்'.
2012 - 2014ல் ஜார்கண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதி பற்றியும், அதிகாரத்தின் கோர முகத்தையும் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை. உள்ளூர் முதலாளிகளின் சுரண்டல் ஒருபுறம் என்றால், அரசியல் ஆதாயங்களுக்காக பழங்குடிகள் எப்படி பலியிடப்படுகிறார்கள் என்பதையும் கதையாக்கி இருக்கிறார்.
நடிப்பு பற்றி பார்த்தால் கலையரசன், தினேஷ் முடிந்த வரை இயல்பாக நடிக்க முயன்றிருக்கிறார்கள். இதில் தினேஷ் கொடுத்த வேலையை கச்சிதமாகவே முடித்திருக்கிறார். ஆனால் முதன்மை பாத்திரமான கலையரசன் காதலியை நினைத்து புலம்புவது, எதேர்சையாக செய்தித்தாளை பார்ப்பது, துப்பாக்கி முனையில் மாட்டுவது எனப் பல இடங்களில் மேலோட்டமான நடிப்பையே வெளிக்காட்டுகிறார். வின்சு ராம் கதாப்பாத்திரம் மூலம் கலை - வின்சு காதலை நமக்கு காட்ட நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் வசனங்களாக மட்டுமே நீள்வதால், உணர்வுபூர்வமான விதத்தில் நம்மை கவரவில்லை. ரித்விகாவுக்கு வழக்கம் போல ஒரு கதாப்பாத்திரம்; வருகிறார், அழுகிறார். அருள் தாஸுக்கு வழக்கம் போல் ஒரு வேடம், வருகிறார் முறைக்கிறார். முத்துக்குமாருக்கு வழக்கம் போல ஒரு வில்லன் வேடம், வருகிறார் கத்துகிறார். பால சரவணனின் ஒரு காமெடி காட்சி, சீரியஸ் படத்துக்கு இடையே சின்ன ரிலாக்ஸ் மோட். உஸ்தாத் என்ற கதாப்பாத்திரத்தில் வரும் யுவன் மயில்சாமி நடிப்பு மிக சிறப்பு. ஆரம்பத்தில் நெகடிவாக பின்பு தோழமையாக என இரு முகங்களை காட்டுகிறார் ஷபீர். மனைவி, குழந்தைகள் பற்றி பேசி கலங்குவது, நண்பனை விட்டுப் பிரிகையில் படபடப்பாக பேசுவது என கிடைக்கும் இடத்தில் எல்லாம் அசத்தி இருக்கிறார்.
பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவில் காடுகளும், ராணுவ பயிற்சி மையமும் கச்சிதமாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. காவக்காடே பாடல் படமாக்கப்பட்ட விதமும், அந்தப் பாடலுக்கான இசையும் பேரழகு.
ஒரு அழுத்தமான கதைக் களத்தை எடுத்துக் கொண்டு, எந்தவித அழுத்தமும் இல்லாமல் எடுக்கப்பட்டிருப்பதுதான் படத்தின் பிரச்சனையே. படத்தின் தெளிவற்ற தன்மை குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட ஒருவர் திருப்பி அடிப்பது எவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும். ஆனால், அப்படி எந்த வீரியமும் இல்லாத காட்சியாக அது ஸ்டேஜ் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு நிஜ சம்பவத்துக்குள் அழுத்தமான காட்சிகளை இணைக்காமல் , நிஜ சம்பவம் ஜார்கண்டிலும், புகுத்தப்பட்ட கதை கிருஷ்ணகிரியிலும் நடக்கிறது. இந்த இரண்டும் இணைக்கப்படும் இடமே செயற்கையாக இருக்கிறது. தினேஷ், கலையரசன் சகோதரர்கள் என்பதே பாதி படத்திற்கு மேல் தான் புரிகிறது. இப்படி அடிப்படை விஷயங்கள் துவங்கி படத்தின் மையம் வரை பல சிக்கல்கள்.
அதிகாரிகளின் சூழ்ச்சி பற்றி தெரியாமல், கலையரசன் ராணுவ பயிற்சி பள்ளி செல்கிறார் என்பது ஓகே. ஆனால் அங்கு எதற்காக தமிழ் ஆட்கள் - இந்தி ஆட்கள் இடையே மோதல்? மனிதா மனிதா பாடலுடன் தினேஷ் செய்யும் கொலைகள் அழுத்தமானவை, ஆனால் கதைக்குள் அந்த மாற்றம் இயல்பாக இல்லாதது, படத்தில் பெரிய ஜம்ப் போன்ற உணர்வை தருகிறது. பார்வையாளர்களின் புரிதலுக்காக எல்லா பாத்திரங்களும் தமிழ் பேசுகிறது என்பது ஓகே. ஆனால் படத்துக்குள்ளும் தமிழ் மொழி இந்தி ஆட்களுக்கு புரிகிறது என்பது என்ன விதமான வடிவமைப்பு என புரியவில்லை. அதிலும் தமிழ் கதாபாத்திரங்கள் தமிழ் பேசும் போது ஆகாத லிப் சிங் எல்லாம், இந்திப் பேசும் கதாபாத்திரங்கள் தமிழ் பேசும் போது ஆகிறது. இதெல்லாம் எப்படி யோசித்தார்கள் என்றே புரியவில்லை.
விசாரணை போன்ற மிகத்தரமான, அதிர்ச்சியூட்டும் உண்மையை சொல்லக்கூடிய படமாக வந்திருக்க வேண்டியது, படத்தின் மேக்கிங்கில் உள்ள குறைகளால் அந்த இடத்தை தவறவிடுகிறது. மொத்தத்தில் படம் பேசும் அரசியலில் மட்டும் அழுத்தமாகவும், சினிமாவாக முழுமை இல்லாமலும் வந்திருக்கிறது இந்த தண்டகாரண்யம்.