நகரத்தில் நடக்கும் ஆபத்தை தடுக்கவும், தன் குழுவின் உயிரை காக்கவும் போராடும் இளைஞனின் கதையே `தணல்'.
புதிதாக காவல்துறையில் பணிக்கு சேருகிறார்கள் அகிலன் (அதர்வா) மற்றும் அவரது நண்பர்கள். இதே பணிக்கு வந்த இன்னும் மூன்று நபர்களையும் சேர்த்து இரவு ரோந்துக்கு செல்ல சொல்கிறார் உயரதிகாரி. அப்படி செல்லும் போது சந்தேகப்படும்படி ஒருவரை பார்க்கும் அகிலன் மற்றும் குழு துரத்தி செல்கிறது. அந்த நபர் ஒரு குடியிருப்பு பகுதிக்குள் சென்று மாயமாகிறார். இரண்டு இரண்டு பேராக பிரிந்து சென்று அந்த நபரை தேட துவங்குகிறார்கள். முதலில் ஏதோ சின்ன திருட்டு கேஸ் என அசால்ட்டாக இருக்கும் காவலர்கள், ஒரு கொலைக்குப் பிறகு சீரியஸ் ஆகிறார்கள். உண்மையில் அங்கு என்ன நடக்கிறது? அகிலன் மற்றும் நண்பர்கள் தப்பினார்களா? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.
ரவீந்திர மாதவா ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். நாயகன் மற்றும் நண்பர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்ற உடனே கதையும் அதற்கு தகுந்தது போல பரபரவென நகர்கிறது. அடுத்து என்ன என்ற ஆச்சர்யமும் எழுகிறது.
அதர்வா ஒரு ஆவரேஜ் நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் அசத்தல் தான், ஆனால் எமோஷனலான காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். வில்லன் ரோலில் அஷ்வின் காக்கமனு நிதானமான ஒரு வில்லத்தனத்தை காட்ட முயல்கிறார். ஆனால் அது பெரிய எஃபக்ட் கொடுக்கவில்லை. ஹீரோயின் லாவண்யா திரிபாதிக்கு ரோலே இல்லை. ஷாரா, ஸ்ரீ வெங்கட், பரணி, அழகம் பெருமாள் என சின்ன சின்ன கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
ஓர் இரவில், நெருக்கமான வீடுகள் நிறைந்த பகுதியில் நடக்கும் கதை என்பதால், முடிந்த அளவு சுவாரஸ்யமான கோணங்கள் மூலம் படத்தை அழகாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன். ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை படத்தின் பரபரப்பை கூட்டுகிறது.
இதன் குறைகள் எனப் பார்த்தால் இரண்டாம் பாதி இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம். முதல் பாதியில் காதல் காட்சி, குடும்ப காட்சி வரை தேமே என நகரும் கதை, அதற்குப் பிறகு பரபரப்பாக இடைவேளை வரை செல்கிறது. அதுவரை வரும் திருப்பங்கள் எல்லாம் ஆச்சர்யப்படுத்துகிறது. ஆனால் டிவிஸ்ட் என்ன என இரண்டாம் பாதியில் சொல்லப்படும் போது சப் என முடிந்து போகிறது.
அதிலும் வில்லன் சொல்லும் ஃபிளாஷ்பேக் மற்றும் இருவருக்கும் என்ன பிரச்சனை என சொல்லும் விஷயம் எல்லாம் ரொம்பவே பலவீனமாக இருக்கிறது. மேலும் திரைக்கதையின் வசதிக்கு ஏற்ப வளைக்கப்பட்டதாகவே தெரிகிறது. வில்லன் பெரும் பலத்துடன் இருக்கிறார் தான், ஆனால் அவரது திட்டமும், ஏன் இதை செய்கிறார் என்ற காரணமும் லாஜிக் இல்லாமல் இருக்கிறது. கூடவே கடைசி வரை ஹீரோ ஏதாவது புத்திசாலித்தனமாக செய்வார் என எதிர்பார்த்தால் வெறுமனே சண்டை மட்டும் போடுகிறார்.
முதல் பாதியில் எழுந்த எதிர்பார்ப்பை, இரண்டாம் பாதியிலும் தக்க வைத்திருந்தால் கவனிக்கத்தக்க ஒரு சீட் நுனி த்ரில்லராக இருந்திருக்கும் இந்த `தணல்'.