சினிமா

வியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி?: தொடரும் பிகில் சர்ச்சை

webteam

பிகில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தப் படத்தின் கதை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பிகில் படத்தின் கதை மீதான வழக்கு தற்போதுதான் தொடரப்பட்டாலும், இந்தப் பிரச்னை ஒரு வருடத்திற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது என்று, கே.பி.செல்வாவின் வழக்கறிஞர் கூறுகிறார்.

அட்லி தரப்பினரிடம் தொடர்ந்து பேசியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், முதலில் இந்த புகாரை விசாரித்த எழுத்தாளர்கள் சங்கம் சில காரணங்களை கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கே.பி.செல்வா வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் தான் தொடரவேண்டும் இதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அட்லி தரப்பு தொடர்ந்து வாதாடிவந்துள்ளனர். இதனால் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்ததுடன், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில், கே.பி.செல்வா தங்களிடம் பணம் பெறும் நோக்குடனோ அல்லது பிரபலமடையும் நோக்கத்துடனோ வழக்கை தொடர்ந்துள்ளனர் என்று அட்லி தரப்பு கூறியது. ஆனால் அட்லி தரப்பு குற்றச்சாட்டை செல்வா தரப்பினர் மறுக்கின்றனர். மேலும் அவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை உருக்கமான பதிவு ஒன்றை பேஸ்புக் பகத்தில் பதிவிட்டுள்ளார் செல்வா. அதேபோல் தங்களுடைய உரிமையை மட்டுமே கேட்பதாக அவரின் வழக்கறிஞர் கூறுகிறார்.

பிகில் கதை வழக்கு தற்போது நடைபெற்றாலும், கே.பி.செல்வா இந்த கதையை ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியே கூறியுள்ளார். அந்த கதையை தயாரிக்க அந்தப் பிரபல நிறுவனம் முடிவு எடுக்கும் நிலையில்‌ இருந்தது. மேலும் இறுதி வடிவத்தை 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த நிறுவனத்திற்கு இ-மெயில் மூலம் செல்வா அனுப்பியுள்ளார். அந்த நிலையில்தான் அட்லியிடம் உதவி இயக்குநராக வேலை செய்யும் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மூலம் கதை திருடப்பட்டுள்ளது என்றும் செல்வா கூறுகிறார்.

செல்வா இவ்வாறு கூறும் நிலையில், அட்லி தன்னுடைய 65 பக்க கதையை 2018-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதியும், 242 பக்க கதையை அக்டோபர் 4-ம் தேதியும் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறினார். ஆனால் அவர் முழு கதையை பதிவு செய்துள்ளதாக கூறும் அட்டோபர் 4-ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. எழுத்தாளர் சங்கத்தில் அனைத்து வியாழக்கிழமைகளிலும் கதைகளை பதிவு செய்ய முடியாது என்ற நடைமுறை உள்ளது. இதனால் அந்த தேதியில் எவ்வாறு அட்லி கதையை பதிவு செய்தார் என்ற கேள்வியையும் செல்வா எழுப்பியிருக்கிறார்.

இதையடுத்து அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு கருத்துக்கேட்க முற்பட்டபோது, அவர்கள் தரப்பில் வழக்கறிஞர், மேனேஜர் மற்றும் அட்லி என யாரும் பதிலளிக்கவில்லை.

அட்லி இயக்கும் படங்கள் ஏதோ ஒரு முந்தைய படங்களின் சாயல் இருக்கிறது என்றே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு உதவி இயக்குனர் கடந்த ஒரு வருடமாக பிகில் கதை என்னுடையது என்று போராடி வருவது குறிப்பிடத்தக்கது.