வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நான் ஜாதி ஒழிப்பு பற்றி பேசிக் கொண்டிருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் தொடங்கப்பட்டது. உதவி இயக்குநர்கள் தங்களது வாசிப்புத்திறனை வளர்த்துக்கொள்ளும் விதமாக இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் தொடர்பான சில நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்று வருகின்றன. இதில்‘96’ திரைப்படக் குழுவினருடன், உதவி இயக்குனர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய்சேதுபதி, இயக்குனர்கள் பிரேம்குமார், வசந்தபாலன் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, ''இங்கு நிறைய உதவி இயக்குநர்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஒருவரிடத்தில் நீங்கள் கதை சொல்வது மிகவும் முக்கியம். அவர்களுக்கு புரியும் படியாக நீங்கள் கதை சொல்ல வேண்டும். இந்த "96" திரைப்படத்திற்குள் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவும் வருவதற்குக் காரணம் இயக்குநர் பிரேம் எங்களிடம் கதை சொன்ன விதம்தான். அதே போல நமக்கு ஒரு விஷயம் கிடைக்காமல் போனால், அடுத்தவர் மீது பழிபோடுவதைத் தவிர்க்க வேண்டும். நாம் நினைத்ததை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். "செக்கச் சிவந்த வானம்" படத்தில் நடிக்கும் போது, மணி சாரிடம் இந்தப் பண்பை நான் பார்த்து வியந்தேன்" என்று பேசினார்.
மேலும், இயக்குநர் பா.இரஞ்சித்துடன் எப்போது இணைவீர்கள்? என்ற கேள்விக்கு,"ரஞ்சித் எனக்கு நல்ல நண்பர். நட்பு வேறு; தொழில் வேறு. இருவருக்குமே அதற்கான நேரம் அமைய வேண்டும். அவருடைய "காலா" பார்த்துவிட்டு அன்றே அவரிடம் பேசினேன். அவரால் மட்டும்தான் அப்படி படம் எடுக்க முடியும். அதே போல "பரியேறும் பெருமாள்" திரைப்படத்தையும் பார்த்துவிட்டு பாராட்டினேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நானும் ஜாதி ஒழிப்பு பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்" என்று பதிலளித்தார்.