ரஜினிகாந்த நடிக்கும் ’காலா’ படத்தின் தலைப்பும் கதையும் தன்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை போரூரை சேர்ந்தவர் கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
நான் ஜி.எஸ்.ஆர் விண்மீன் கிரியேஷன்ஸ் மூலம் 1996-ல் பிலிம்சேம்பரில் ’கரிகாலன்’ என்ற படத் தலைப்பை பதிவு செய்தேன். கரிகால் சோழனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை இது. இதில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என்று அவரைச் சந்தித்தேன். அவர், பிறகு பார்க்கலாம் என்று கூறினார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, வந்துவிட்டேன். இந்நிலையில் தனுஷின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா என்கிற கரிகாலன் படத்தில் ரஜினிகாந்த நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. என் கதையையும் தலைப்பையும் திருடி, மறுவடிவமைப்பு செய்து படத்தை எடுப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
ரஜினி நடிக்கும் ஒவ்வொரு படத்துக்கும் இப்படி ஏதாவது பிரச்னையை கிளப்புவது வாடிக்கையாகிவிட்டது என்று அவர் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.