சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம், ஜனவரி 10-ஆம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்ட நிலையில், உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன், தனது கதை திருடப்பட்டதாகக் கூறி, படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இது சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பராசக்தி.. என்ற தலைப்பிலிருந்தே சிக்கலை சந்தித்து வரும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம், தற்போது மேலும் ஒரு சிக்கலை சந்தித்துள்ளது சினிமா வட்டாரங்களில் அதிகம் பேசும்பொருளாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் 25-வது படமாகவும், இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷுக்கு 100வது படமாகவும், ரவிமோகன் வில்லனாக நடிக்கும் முதல் படமாகவும், நடிகை ஸ்ரீலிலா தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முதல் படமாகவும் அமைந்துள்ளது இயக்குநர் சுதா கொங்குராவின் பராசக்தி திரைப்படம். இதில் நடிகர் அதர்வாவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் பராசக்தி திரைப்படம் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட சூழலில், படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்கவேண்டும் என உதவி இயக்குநர் ஒருவரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பராசக்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், அது திருடப்பட்டதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குநர். வழக்கு மனுவில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2010ஆம் ஆண்டு பதிவு செய்த இந்த கதையை தயாரிப்பாளர் சேலம் தனசேகரனிடம் கொடுத்ததாகவும் பிறகு அதை நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கராவிடம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மனுதாரர் வருண் ராஜேந்திரனின் வழக்கறிஞரை தொடர்புகொண்டு பேசும்போது, ரூ.2 கோடி இழப்பீடாகவும் படத்தின் கதைக்கான அங்கீகாரம் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பராசக்தி படத்தின் கதை திருட்டு புகார் தொடர்பாக அனைத்து தரப்பினரையும் விசாரித்து ஜனவரி 2-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.