நடிகை அசின் மற்றும் ராகுல் சர்மாவின் மகள் அரின் 12 மொழிகளைப் பேசும் திறமையுடன் வளர்ந்து வருகிறார். மொபைல், டிவி போன்ற திரை நேரத்தை தவிர்த்து, புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அசின், மகளின் கல்வி மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
செய்தியாளர் - M.மீரா
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை அசின். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகிய அசின், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அரின் ரெய்ன் சர்மா எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தைக்கு தற்போது 9 வயதாகிறது. இந்நிலையில், தனது மனைவி அசின் மற்றும் மகள் குறித்துப் பேசியுள்ள ராகுல் சர்மாவின் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
தங்களது மகள் அரின் சுமார் 12 மொழிகளைப் புரிந்துகொண்டு பேசுவதாகவும், அதில் கொரியன், ஜப்பானிய, தாய், சீன மொழிகளும் அடங்கும் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். என்னால் இரண்டு மொழிகளைக் கூட ஒழுங்காகப் பேச முடிவதில்லை, நாங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியோடு நின்றுவிட்டோம். ஆனால், ஆரினின் இந்த மொழித் திறன் வியப்பளிக்கிறது என்று ராகுல் சர்மா கூறியுள்ளார்
மேலும், மகளின் வளர்ப்பில் அசின் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரினுக்கு இதுவரை மொபைல் போன், தொலைக்காட்சி என எந்தவிதமான திரை நேரமும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். வீட்டில் புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், மகள் தற்போது 2-ஆம் வகுப்பு படித்தாலும், 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்களைக்கூட வீட்டில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மகளின் கல்வி மற்றும் வளர்ப்பில் அசின் காட்டும் அக்கறையே இதற்குக் காரணம் என்றும் ராகுல் பாராட்டியுள்ளார். திரையுலகிலிருந்து விலகிய அசின், தற்போது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.