சினிமா

பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு

webteam

பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதான தாதா சாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்கான விருது பழம்பெறும் இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு வழங்கப்பட இருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் இன்று அறிவித்துள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை தலைநகர் டெல்லியில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அந்த விழாவில் நடிகை ஆஷா பரேக்குக்கு விருது வழங்கப்பட இருக்கிறது. பிரபல நடிகை ஹேமமாலினி உள்ளிட்டோர் அடங்கிய குழு நீண்ட ஆலோசனைக்குப்பிறகு ஆஷா பரேக்கை தேர்வு செய்தததாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 1942-ம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி ஆஷா பரேக் பிறந்தார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பன்முக திறமை கொண்ட ஆஷா பரக் 1960-களில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் ஆஷா பரேக். அவர், பாலிவுட்டின் ஹிட் கேர்ள் என அழைக்க கூடிய வகையில் செயல்பட்டார்.

பேபி ஆஷா பரேக் என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் பரேக். பின்னர், இவரது 10-வது வயதில் புகழ் பெற்ற இயக்குநர் பிமல் ராய் ஒரு நடன நிகழ்ச்சியில் இவரைக் கண்டு தனது "மா" (1952) திரைப்படத்திலும் அதன்பின்னர் "பாப் பேட்டி" (1954) படத்திலும் இவரை நடிக்க வைத்தார். அவரை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.