காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் ட்ரெண்ட்லௌட் என்ற நிறுவனத்துடன் இணைந்து As i am Suffering from Kadhal' என்ற இணையதள தொடரை தயாரித்திருக்கிறார். தற்போதைய காதலையும் அவற்றின் வகைகளையும் சுற்றி பின்னப்பட்டுள்ள இந்த தொடர் 10 பாகங்கள் கொண்டது. மூன்று இளம் தம்பதிகள், ஒரு விவாகரத்து பெற்ற மனிதர், அவரது 8 வயது மகள் தான் கதையின் கதாபாத்திரங்கள்.
'பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் காதலில் ஒருவருடைய அனுபவங்கள், காதலின் மயக்கம் எப்படி போகப்போக விரக்தியாக மாறுகிறது என்பதை இந்த தொடரில் காமெடியாக சொல்லியிருக்கிறார்கள். காதலில் விழுவது எளிது, காதலில் இருப்பது கடினம். என்ன தான் காதலில் நல்ல அனுபவங்கள் கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் முடிவில்லா நம்பிக்கையோடு காதலில் மனிதன் முயற்சிப்பது என்னை கவர்ந்த விஷயம். இதை இந்தத் தொடரில் சொல்ல முயற்சித்திருக்கிறோம் ’ என்றார் பாலாஜி மோகன். இந்த தொடர், ஹாட் ஸ்டாரில் இன்று வெளியிடப் படுகிறது.
பாலாஜி மோகன் மற்றும் அவரின் மொத்த குழுவும் இன்று மாலை 5 மணிக்கு ஃபேஸ்புக்கில் நேரலையில் தோன்றி, இந்த தொடரை பற்றி பேசுகின்றனர். ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கின்றனர். இன்று ஒரே நேரத்தில், இந்தத் தொடரின் பத்து பாகங்களையும் ரிலீஸ் செய்கின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இந்த தொடர் ஆங்கில சப்டைட்டிலோடு வெளியாகிறது.