திரை உலகில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வேலை நிறுத்தம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே தமிழ்த் திரை உலகம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகிறது. விரைவில் தீர்க்கப்பட்டு விடும் என எதிர்பார்த்த பலர் மாதக் கணக்காக பிரச்னை இழுத்து கொண்டிருப்பதால் சோர்ந்து போய் உள்ளனர். க்யூப் சமந்தமாக ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலால் படப்பிடிப்புக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. வெள்ளிக்கிழமை பிறந்தால் புதிய படம் திரைக்கு வரும் என நம்பி காலங்காலமாக பல திரை ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர். அந்த மகிழ்ச்சியில் பெரிய இடைவெளி விழுந்துள்ளது.
இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து நடிகர் அரவிந்த்சாமி ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்து கொண்டுள்ளார். “நேர்மையாக சொன்னால் இந்த வேலை நிறுத்தம் சோர்வு அளிக்கிறது. எனக்கு வேலை செய்ய வேண்டும்.ஏதாவது யோசனை இருந்தால் உடனே முன்னெடுங்கள். வேலைகளை ஆரம்பிக்கவும் படப்பிடிப்புக்களை நடத்தவும் உதவுங்கள். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக இதற்கு தீவு காணுங்கள்” என்று நொந்துபோய் எழுதியுள்ளார்.