சினிமா

சினிமா வெற்றிக்கு கன்றுக்குட்டிகளை பலிகொடுப்பதா? ’வில்லனு’க்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

சினிமா வெற்றிக்கு கன்றுக்குட்டிகளை பலிகொடுப்பதா? ’வில்லனு’க்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

webteam

படத்தின் வெற்றிக்காக எருமை கன்றை பலியிட்ட சம்பத்துக்கு எதிராக பெங்களூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஹீரோவாகவும், சுதீப் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள கன்னட படம், ‘தி வில்லன்’. பிரேம் இயக்கியுள் ளார். மேகா ஸ்ரீகாந்த், எமி ஜாக்சன், மிதுன் சக்கரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த 18 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. 

(பிரேம், சுதீப், எமி ஜாக்சன்)

இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று மாநிலம் முழுவதும் சிவராஜ்குமார், சுதீப் ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர். பல தியேட்டர் களில் இவர்களின் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து வருகின்றனர். 

இதேப்போல தாவணகெரே மாவட்டம் ஜகலூரில் உள்ள ஒரு தியேட்டரிலும் இந்தப் படம் திரையிடப்பட்டு உள்ளது. அதைப் பார்க்க வந்த சுதீப் ரசிகர்கள், எருமைக் கன்றுகளை அரிவாளால் வெட்டி பலியிட்டனர். பின்னர் அதன் ரத்தத்தை சுதீப் பேனர்களில் தெளித்தனர். இதே போல மற்றொ ரு இடத்தில் ஆடுகளை பலியிட்டனர். 

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. கர்நாடகாவில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து விலங்குகள் நல அறக்கட்டளை சார்பில் பெங்களூரு டவுண் ஹாலில் நேற்று ஆர்ப்பட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில் நடிகர் சிவராஜ்குமார், ‘கன்றுகளை பலிகொடுப்பது மனிதத் தன்மையற்றது. இதுபோன்ற செயல்களை ரசிகர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் இயக்குனர் பிரேம், அவர் மனைவி நடிகை ரக்‌ஷிதா ஆகியோரும் இதைக் கண்டித்துள்ளனர். ‘நடிகருக்காக, பாவப்பட்ட ஒரு விலங்கை பலியாக்குவது ஏற்புடையது அல்ல. உங்கள் அன்பை இப்படி காண்பிக்க வேண்டாம். புரிந்துகொள்ளுங்கள்’ என்று நடிகை ரக்‌ஷிதா தெரிவித்துள்ளார்.