சினிமா

ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் 'காலா', 'வலிமை' நாயகி ஹ்யூமா குரேஷி!

webteam

'காலா' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவரும், 'வலிமை' படத்தில் நடித்து வருபவருமான ஹ்யூமா குரேஷி முதல்முறையாக ஹாலிவுட்டில் நடித்துள்ள 'ஆர்மி அஃப் தி டெட்' படத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

'நேர்கொண்ட பார்வை' வெற்றிக்குப் பிறகு அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி 'வலிமை' படத்தில் இணைந்துள்ளது. அஜித்துக்கு ஜோடியாக ஹ்யூமா குரேஷி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதற்கிடையே, 'வலிமை' படத்தின் நாயகி ஹ்யூமா குரேஷி தன்னுடைய அடுத்தப் படம் தொடர்பாக அப்டேட் கொடுத்துள்ளார். 'வலிமை' படத்துக்கு இடையே அவர் ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வந்தார். 'ஆர்மி ஆஃப் தி டெட்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை '300', 'மேன் ஆஃப் ஸ்டீல்', 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் - டான் ஆஃப் ஜஸ்டிஸ்', 'ஜஸ்டிஸ் லீக்' போன்ற பிரமாண்டங்களை இயக்கியவரும், ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநருமான ஸாக் ஸ்னைடர் இயக்கி இருக்கிறார்.

லாஸ் வேகாஸ் நகரத்தை ஜோம்பிகள் சூழ்ந்திருக்கும் நிலையில், மிகப் பெரிய திருட்டு ஒன்றுக்கு திட்டமிட்டு, ஜோம்பிகள் மத்தியில் அந்த திருட்டை எப்படி நடத்தி முடிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் மையக்கரு. இதில் ஒரு கதாபாத்திரத்தில் ஹ்யூமா குரேஷி நடித்திருக்கிறார். இது அவருக்கு முதல் ஹாலிவுட் படம். படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

'வலிமை' படத்தின் அப்டேட மே 1-ம் தேதி வெளியாக இருக்கின்ற நிலையில், ஹ்யூமா குரேஷியின் முதல் ஹாலிவுட் திரைப்படம் மே 21 திரையரங்குகளிலும், நெட்ஃபிளிக்ஸிலும் வெளியாக இருக்கிறது.