பராசக்தி திரைப்படம் குறித்து விஜய் ரசிகர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதாகவும், அவதூறு பரப்புவதாகவும் இயக்குநர் சுதா கொங்கராவும், கிரியேட்டிவ் புரடியூசர் ஒருவரும் குற்றஞ்சாட்டிய நிலையில், சிவகார்த்திகேயனும் இதுகுறித்து பதிலளித்துள்ளார்.
பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் வருவதாக இருந்தது. அதேசமயத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்த பராசக்தி திரைப்படமும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், விஜயின் கடைசிப் படம் வரும் வேளையில் வேண்டுமென்றே, ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் சிவகார்த்திக்கேயனின் பராசக்தி திரைப்படத்தை திமுக வெளியிட முடிவு செய்திருப்பதாகக் கூறி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். தொடர்ந்து, பராசக்தி படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போதும், ஜனநாயகன் பட டிரெய்லரின் பார்வையாளர்களை விட அதிகமாக பெற வேண்டும் என்ற காரணத்திற்காக, பராசக்தி திரைப்படத்திற்கு செயற்கையான முறையில் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்ததாகவும் விஜய் ரசிகர்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தசூழலில் தான் பராசக்தி படத்திற்கு விஜய் ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை பரப்புவதாக படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவும், கிரியேட்டிவ் புரடியூசர் ஒருவரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பராசக்தி படத்தின் க்ரியேட்டிவ் ப்ரொடியூசரான தேவ் ராம்நாத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பதிவில், ”உங்களுடன் சேர்ந்து ஒரு படத்தை வெளியிடுகிறோம் என்பதற்காகவே எங்களது படத்தை சிதைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. எதிர்மறையான விமர்சனங்கள், பழைய வீடியோக்கள், மக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துவது, திரையரங்குகளில் அரசியல் முழக்கங்களை எழுப்புவது, புக் மை ஷோ செயலி ரேட்டிங்கில் விளையாடுவது, இப்படி செய்வதெல்லாம் போட்டியல்ல.
கடந்த ஆண்டு வெளியான ஒரு பெரிய படத்திற்கும் இதையே தான் செய்தீர்கள்.
சினிமா ரசிகனாக சொல்கிறேன், இது நமக்கு ஆரோக்கியமானது அல்ல. பராசக்தி திரைப்படம் மாணவர்களின் இயக்கத்தை பற்றியது, அதை கண்டு தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும்” என எனத் தெரிவித்திருந்தார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விஜய் ரசிகர்களை குற்றஞ்சாட்டி பேசியிருக்கும் பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா, “தணிக்கை வாரியத்திடம் சான்றிதழ் வாங்குவது பெரிய விஷயமல்ல, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மன்னிப்புச் சான்றிதழ் வாங்குங்கள், அப்போதுதான் படம் ஓடும் என ஒருவர் பதிவிட்டுள்ளார். இது ஆரோக்கியமான சினிமா சூழல் அல்ல. ஒரு படத்திற்கு எதிராக பெயர் தெரியாத ஐடி-களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்பி வருகிறார்கள். இந்த மாதிரியான, ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டியிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இந்தசூழலில் தான் விஜய் ரசிகர்கள் பராசக்தி படம் குறித்து தவறான விமர்சனங்களை பரப்பி வருவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ”சில ரசிகர்கள் அப்படி பேசுவது பற்றி நாங்கள் கவலைப்பட விரும்பவில்லை, அதை ஒட்டுமொத்த ரசிகர்களும் செய்கிறார்கள் என பொதுமைப்படுத்தவும் நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் எப்போதும் சகோதரர்களைப் போலவே இருக்கிறோம், அது அப்படியே தான் இருக்கிறது” என பேசியுள்ளார். சிவகார்த்திகேயனின் பதிலை பல ரசிகர்கள் ஆதரித்து வருகின்றனர்.