சினிமா

படப்பிடிப்பு விபத்தில் பலியாகும் லைட்மேன்கள் - இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டும் ரஹ்மான்

சங்கீதா

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ‘ஃபெப்சி’ -யின் ஒரு பிரிவான லைட்மேன்களுக்கு உதவ, சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னிசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் கயிறு அறுந்து உயிரிழந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து ஐயர்கண்டிகையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட் மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்தத் தொடர் விபத்துகள் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி, சென்னை வடபழனியில் உள்ள ஃபெப்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “திரைப்பட துறையில் நிறைய விபத்துக்கள் ஏற்படுகிறது. தமிழ் திரைப்பட துறையில் தற்போது கடை நிலை ஊழியரின் சம்பளம் ஆயிரம் ரூபாய். திரைப்படத்துறையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது, சில சமயங்களில் மரணம் அடைகின்றனர். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் விபத்து ஏற்பட்டால் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்கின்றனர். ஆனால் சிறிய படங்களில் நடிக்கும் ஊழியர்களுக்கு விபத்து ஏற்பட்டால் நிதி உதவி செய்ய முடியவில்லை. அந்த குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசாங்கம் நிதி உதவி வழங்க கோரிக்கை வைக்கிறோம். மார்ச் 19-ம் தேதி ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நேரு விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் வரும் நிதியில் விபத்து ஏற்பட்டால், விபத்தில் இறக்கும் லைட்மேன்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடிகர்கள் தங்களது திரைப்படத்தில் நடிக்கும் ஊழியர்களுக்கு திரைப்பட பணியில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவ முன் வர வேண்டும். நடிகர்கள் வருமானத்தில் 1% பகுதியை திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக ஒதுக்க வேண்டும். திரையரங்கில் டிக்கெட் விற்பனையில் ஒரு சதவீதத்தை எடுத்து அறுபது வயதை அடைந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். வருகின்ற பட்ஜெட் தொடரில் திரைப்படத்துறையினருக்கு உதவும் வகையில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கலை துறையினருக்கு வீடு கட்ட வழங்கிய இடத்தில், தற்பொழுது வீடு கட்ட 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பாதுகாப்பு வசதிகள் இருக்கின்ற படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே லைட் மேன்கள் பணி புரிவார்கள். திரைப்பட அரங்குகள் வைத்திருக்கின்ற முதலாளிகள், தங்கள் படபிடிப்பு தளங்களில் பாதுகாப்பு கருவிகளை வைத்திருந்தால் மட்டுமே எங்களுடைய தொழிலாளர்கள் பணிப்புரிவார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.