’அவெஞ்சர்ஸ்; எண்ட்கேம்’ ஹாலிவுட் படத்துக்காக, இந்தி, தமிழ், தெலுங்கில் ’மார்வெல் ஆன்தம்’ என்ற பாடலை உருவாக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்!
சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஸ்பைடர்மேன், பேட்மேன், அயன்மேன், தார், ஹல்க் உட்பட பல சூப்பர் ஹீரோ படங்கள் வசூலை வாரி குவித்து வருகின்றன. விறுவிறுப்பான திரைக்கதையும் வியக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் உட்பட பல காரணங்கள் இதற்குக் கூறப்படுகின்றன. அதில், ’அவெஞ்சர்ஸ்’ பட வரிசைக்கும் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
அவெஞ்சர்ஸ் பட வரிசையில் இப்போது உருவாகியுள்ள படம், ’அவஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ (Avengers: Endgame). ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருபலோ, கிறிஸ் எவான்ஸ் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ருசோ சகோதரர்களான, அந்தோனி ருசோ, ஜோ ருசோ இயக்கியுள்ளனர். ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்தியாவில் இந்தப் படம், ஆங்கிலத்துடன் இந்தி, தெலுங்கு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகிறது. இதில் தமிழ்ப் பதிப்புக்கான வசனத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருக தாஸ் எழுதுகிறார்.
இந்நிலையில் இந்தப் படத்துக்காக, ’மார்வெல் ஆன்தம்’ உருவாக்க ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை ஒப்பந்தம் செய்திருக்கிறது, மார்வெல் இந்தியா! இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு புதிய பாடலை உருவாக்கியிருக்கிறார் ரகுமான். இந்தப் பாடல் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
"என் குடும்பத்திலேயே என்னைச் சுற்றி மார்வெல் ரசிகர்கள் சூழ்ந்திருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு திருப்திகரமான மற்றும் பொருத்தமான பாடலைக் கொடுக்க அதிக அழுத்தம் ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்தப் பாடலை அதிகம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்" என்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
"அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் மட்டும் அல்ல, ரசிகர்களுக்கான உணர்ச்சிப்பூர்வமான பயணம். ரசிகர்கள் விரும்பும் மார்வெல்லை ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் இசையில் கொண்டாடுவதுதான் சரியான வழி. ரசிகர்களின் ஆதரவுக்கு நாங்கள் சிறிய அளவில் தெரிவிக்கும் நன்றி" என் கிறார் மார்வெல் இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல்!