லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். 91-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக இருந்த நடிகர் கெவின் ஹார்ட் விலகியதை அடுத்து, வேறு யாரும் தொகுத்து வழங்கவில்லை. இதனால் தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த விழா நடக்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்று வரும் விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிந்துள்ளார். கருப்பு கோட் சூட்டுடன் டால்பி தியேட்டரில் தான் நிற்கும் புகைப்படத்தையும், ஆஸ்கர் நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டையும் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு, "ஸ்லம் டாக் மில்லியனர்" படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.