அனிருத் - ரஹ்மான் web
சினிமா

“நிலைச்சு நிக்கறீங்க.. இதையும் கூட பண்ணுங்க” - அனிருத்துக்கு ரஹ்மான் வேண்டுகோள்..!

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்த அனிருத்தை பாராட்டிய ஏஆர் ரஹ்மான், அவரிடம் ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார்.

Rishan Vengai

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. முக்கோண காதல்கதையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள என்னை இழுக்குதடி, லாவண்டர் நேரமே முதலிய பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் சரியான வரவேற்பை பெறாத நிலையில், காதலிக்க நேரமில்லை திரைப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியாகவிருககும் நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் ஜெயம்ரவி, நித்யா மேனன், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்ட நிலையில், சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத்தும் கலந்துகொண்டார்.

அனிருத்துக்கு ரஹ்மான் வைத்த கோரிக்கை..

இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அனிருத், ஏஆர் ரஹ்மானின் தீவிரமான ரசிகர் என்பதையும், அதற்கான ஃபேன்பாய் மொமண்ட்டையும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அனிருத், “சமூக வலைத்தளங்களில் பலரும் அடுத்த சிறந்த இசையமைப்பாளர் அனிருத் தான், இனி அவர் Era தான் என பல விஷயங்களை பேசி கொண்டு இருக்கின்றனர். ஆனால் நான் எப்போதும் சொல்வது போல ‘தலைவன் தலைவன் தான் தொண்டன் தொண்டன் தான்’ என அனிருத் குறிப்பிட்டார்.

அனிருத் பேசியதற்கு பிறகு பேசிய ஏஆர் ரஹ்மான், ”அனிருத் சிறப்பாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் நிறைய பெரிய படங்களுக்கும் இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். அப்போது 10 இசையமைப்பாளர்கள் தான் இருந்தார்கள், ஆனால் இன்று பத்தாயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அதில் தனியாக நிலைத்து நிற்கிறார் என்றால் திறமை இல்லாமல் வேறு எதுவும் கிடையாது. அதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

அப்படி பெரிய சம்பவங்கள் எல்லாம் செய்துவிட்டு இங்கே வந்து ‘தலைவன் தலைவன் தான். தொண்டன் தொண்டன் தான்’ என தில்லாக பேசுகிறார் பாருங்கள். அதற்கு அவருக்கு பெரிய மனசு வேண்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். ஆனால் அனிருத்திடம் ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் எனக்கு உள்ளது. நீங்கள் இன்னும் கிளாசிக்கல் மியூசிக் மற்றும் பாடல்களை நிறைய செய்ய வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது இசைத்துறையில் இன்னும் நீண்ட காலம் உங்களால் நிறைய சாதிக்க முடியும். உங்களை போன்ற ஒருவர் அதைசெய்யும் போது அடுத்துவரும் இளம் இசையமைப்பாளர்களும் அதை தொடர்ந்து செய்வார்கள்” என்று பேசினார்.