ஏ.ஆர்.ரஹ்மான் முகநூல்
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி... ரூ.50,000 இழப்பீடு!

கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக புகார் எழுந்தது.

ஜெனிட்டா ரோஸ்லின்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை, டிக்கெட் எடுத்தும் காண இயலாதவருக்கு இழப்பீடு வழங்க, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர், அதே ஆண்டில் செப்டம்பர் 10-ம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பெற்ற டிக்கெட்டுடன் வரலாம் என அறிவித்தனர்.

ஆனால், இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.

கோல்டு, பிளாட்டினம், சில்வர் என பல்லாயிர ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக புகார் எழுந்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் மன்னிப்பு கோரியது. அதேபோல் ஏஆர் ரகுமானும் நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்தார்.

இந்தநிலையில், டிக்கெட் எடுத்திருந்தும், முறையான முன்னறிவிப்பு இல்லாததாலும், போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் பங்கேற்க முடியவில்லை என, அர்ஜூன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க கோரியிருந்தார். இதனை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், இழப்பீடாக 50,000 ரூபாயையும், வழக்கு செலவிற்காக 5 ,000 ரூபாயையும், 2 மாதங்களுக்குள் அர்ஜூனுக்கு வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு ஆணையிட்டுள்ளது.