தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உச்சம்பெற்றுவரும் சிவகார்த்திகேயன், ’அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 300கோடிக்கு மேல் வசூலை ஈட்டிய தமிழ் ஹீரோக்கள் பட்டியலில் ரஜினி, விஜய், கமலுடன் தன்னை இணைத்துகொண்டார்.
அமரன் என்ற மிகப்பெரிய வெற்றி படத்திற்கு பிறகு, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 என்ற திரைப்படத்திலும், டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ’பராசக்தி’ என்ற படத்திலும் அடுத்தடுத்து நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் SK23 படத்திற்கான டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், படத்திற்கு ’மதராஸி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17-ம் தேதியான இன்று தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், பிறந்தநாள் அப்டேட்டாக SK23 படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியிடப்பட்டது.
வெளியான அப்டேட்டின் படி, படத்திற்கு ’மதராஸி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிளிம்ப்ஸ் வீடியோ முழுக்க முழுக்க ஒரு பக்கா ஆக்ஸன் திரைப்படமாக கட்செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இயக்குநர் ஏஆர் முருகதாஸுக்கு இது ஒரு கம்பேக் திரைப்படம் என்பதால், பெரிய திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவரும் நிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளும் எதிர்ப்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ’மதராஸி’ திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், 'டான்சிங் ரோஸ்' சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார்.