சர்கார் பட விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் 20ஆம் தேதி வரை இயக்குநர் முருகதாஸை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
‘சர்கார்’ திரைப்படத்தில் இலவச திட்டங்கள் விமர்சிக்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. அதில் அரசுக்கு எதிராக இருப்பதாகக் கூறப்படும் காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டாதால், அதில் அடிப்படை முகாந்திரம் இல்லை என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முருகதாஸுக்கு எதிரான புகார் அளித்த தேவராஜன் ஆஜராகி சர்கார் படத்தில் முருகதாஸ் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்று அமைத்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தெரிவித்தார். அத்துடன் இது தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும் கூறினார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு பிரபலமானவர்கள் செய்தால் அது தப்பு, அதையே பிரபலமில்லாதவர்கள் செய்தால் தப்பில்லையா எனக் கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து வழக்கை 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அதுவரை முருகதாஸை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் முன் ஜாமீன் மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் மூத்த வழக்கறிஞர் இவ்வழக்கில் ஆஜராகி வாதாடவுள்ளதாகவும், அதற்கு ஒருவாரம் அவகாசம் கோரியும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து வாதிட்ட ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு வழக்கறிஞர், தற்போதுள்ள கைது தடையை 20ஆம் தேதி வரையில் நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதனையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி முருகதாஸை 20ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.