Anupama Parameswaran Love
சினிமா

"Narcissistic, Red Flag, Controlling.." முன்னாள் காதல் குறித்து அனுபமா | Anupama Parameswaran

பல வித ரெட் ஃப்ளாக் அறிகுறிகள் காட்டும். ஆனால் நாம் அதனை கவனிக்க மாட்டோம். சுற்றி உள்ளவர்கள் சுட்டிக்காட்டும் போதும் அதனை புரிந்து கொள்ள மாட்டோம். ஆனால் மிக மோசமான விஷயம் நடக்கையில் தான், நாம் கவனிப்போம்.

Johnson

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய `பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து தமிழில் தனுஷுடன் `கொடி', தெலுங்கில் நானியுடன் `கிருஷ்ணார்ஜுன யுத்தம்', கன்னடத்தில் புனீத் ராஜ்குமாருடன் `நடாஷர்வபோமா' உட்பட பல படங்களில் நடித்தார். பிரதீப் ரங்கநாதனுடன் இவர் நடித்த டிராகன் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவுடன் நடித்த `பைசன்' படமும் பெரிய வெற்றியடைந்தன. சில காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தன்னுடைய மௌனத்துக்கு காரணம், ஒரு சிக்கலான உறவில் இருந்தது என சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார்.

அந்தப் பேட்டியில் "உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இரண்டு வருடத்து வலியின் வெளிப்பாடுதான் அந்தப்பதிவு. ஏதோ சாதாரணமான புகைப்படமாக அதனை பதிவிடவில்லை. சில காலமாக நான் சமூக வலைத்தளங்களிலும் இல்லை. நான் தயாரான பின்பு தான் திரும்பி வர வேண்டும் என உறுதியாக இருந்தேன். ஒரு பெண் தன்னை பற்றிய பெரிய உண்மையை அறிந்து, அதிலிருந்து குணமாகி வெளியே வந்த பயணமும், அதை பற்றி அவள் வெளிப்படையாக சொன்னதும் அதில் இருக்கிறது. ஒரு Narcissistic நபரின் உறவிலிருந்து வெளியே வந்ததை தான் நான் குணம் ஆனதாக குறிப்பிடுகிறேன். சிலர் அப்படியான உறவி இருப்பதை அறியாமல் கூட இருப்பார்கள். அவர்கள் தங்களை உடைத்துக் கொண்டு தற்கொலை வரைகூட செல்வார்கள். ஒருவேளை நான் என் மனதை திறந்து சொல்லாமல் தவறான முடிவை எடுத்திருந்தால், இன்று எனக்கு அதிக அன்பு கிடைத்திருக்கும்.

அந்தப்பதிவிட்டதும் பலரும் நான் அதனை கவன ஈர்ப்புக்காக செய்தேன் எனக் கூறினார்கள். இந்த உலகம் நமக்கு பல வித ரெட் ஃப்ளாக் அறிகுறிகள் காட்டும். ஆனால் நாம் அதனை கவனிக்க மாட்டோம். சுற்றி உள்ளவர்கள் சுட்டிக்காட்டும் போதும் அதனை புரிந்து கொள்ள மாட்டோம். ஆனால் மிக மோசமான விஷயம் நடக்கையில் தான், நாம் கவனிப்போம். அது எனக்கு விரைவிலேயே நடந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதன் பின்பு தான் அந்தப் பதிவை நான் இட்டேன். இந்த மாதிரியான உறவில் இருக்கும் போது Narcissistic நபர் நம்மை மெல்ல மெல்ல கட்டுப்படுத்த முயற்சிப்பார். அதனை மிகவும் ஸ்டார்ட்டர்ஜிக் ஆக செய்வார். உதாரணத்துக்கு நீ அணிந்துள்ள உடை நன்றாக இல்லை, இதை அணியாதே என சொன்னால் நாம் அவர் சொல்வது சரி அல்ல என தெரிந்து கொள்வோம். எனவே நான் சுடிதார் அணிந்தால், நீ இந்த சுடிதாரில் மிக அழகாக இருக்கிறாய் என சொல்வார். அவருக்கு பிடித்திருக்கிறதே என இன்னும் பல சுடிதார்களை வாங்குவோம். நாம் மெல்ல மெல்ல மாறுகிறோம் என்பது நமக்கே தெரியாமல் நடக்கும். உணவு மேசையில் பேசி சிரிக்கும் ஒரு ஆள், அவருக்கு பிடிக்காது என்பதற்காக அமைதியான ஒரு ஆளாக மாறுவோம். இன்ஸ்ட்டாவில் நீ போட்ட புகைப்படம் நன்றாக இல்லை, அதை டெலிட் செய்துவிடு என்பார். இப்படி ஒவ்வொன்றாக சொல்லி நம்மை முழுவதும் கட்டுப்படுத்துவார்கள்.

காதலிக்க ஆரம்பித்து மூன்றே மாதத்தில் அவர் வீட்டிலிருந்து திருமண பேச்சை எடுக்க ஆரம்பித்தார்கள். நான் தான் இது சரியான நேரம் அல்ல என தள்ளிப் போட துவங்கினேன். நான் தயார் தான் ஆனால் அந்த நபர் இன்னும் பக்குவப்பட வேண்டும் என சொன்னேன். ஏனெனில் அது காதல் அல்ல, ஒருவரை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசரம். அப்படி ஒரு நபரிடம் பேச நாம் ஒத்திகை பார்த்து, அவர் என்ன சொல்வார் என மனதில் நினைத்து தான் பேச வேண்டும் என்பது எவ்வளவு பெரிய அபாயம். என் திரைப்பயணத்தில் பெரிய வெற்றியடைந்த டிராகன் பட புரமோஷனில் கூட கலந்து கொள்ளவிடாமல் செய்தார்.

அந்த சமயத்தில் எல்லாம் என்னிடம் யாரவது எப்படி இருக்கிறாய் எனக் கேட்டால் கூட அழும் நிலையில் இருந்தேன். என்னிடம் நெருக்கமான நபர்களின் கண்களை கூட பார்க்காமல் இருந்தேன். அந்த ஒன்றரை வருடமும் பெரும் பயத்தோடு இருந்தேன். Narcissistic பற்றி இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் அந்நியன் படத்தில் வருவது போல ஒருநாள் ரெமோவாக நடந்து கொள்வார். இப்படி ஒருவர் கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும் என தோன்றும். அடுத்த நாளே அந்நியன் ஆக மாறுவார். இப்போது இதை நான் வெளிப்படையாக சொல்ல காரணம், எனக்காக நான் பேசாமல் யார் பேசுவார். இதனால் என்னை பற்றி தவறாக பேசும் 100 சதவீத ஆட்களில் 10 சதவீத ஆட்களாவது புரிந்து கொள்வார்கள் அல்லவா. அந்த 10 சதவீதம் எவ்வளவு முக்கியம் எனக்கு தெரியும்." என்றார்.