துல்கர் சல்மான் நடிக்கும், ’த ஸோயா ஃபேக்டர்’ படம் விராத் கோலி, தோனி ஆகியோரின் கதையை கொண்டதல்ல’ என்று அந்தப் படத்தின் கதாசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்தியில் சோனம் கபூர் நடிப்பில் உருவாகும் படம், ’த ஸோயா ஃபேக்டர்’. எழுத்தாளர் அனுஜா சவுகான் இதே பெயரில் எழுதிய நாவலின் கதையை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தை அபிஷேக் சர்மா இயக்குகிறார். இவர் ஏற்கனவே, ’தேரே பின்லேடன்’, ’த ஷாக்கீன்ஸ்’, ’தேரே பின் லேடன்: டெட் ஆர் அலைவ்’, ‘பர்மனு: த ஸ்டோரி ஆப் பொக்ரான்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் மம்மூட்டியின் மகனும் ஹீரோவுமான துல்கர் சல்மான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
இதுபற்றி இந்த நாவலின் ஆசிரியர் அனுஷா சவுகான் கூறும்போது, ‘முதலில் தோனி பற்றிய கதை என்றார்கள். இப்போது விராத் கோலி பற்றிய கதை என்கிறார்கள். இது, இவர்கள் இருவர் பற்றிய கதையும் இல்லை. கதை என்னவென்றால், சோயா என்ற பெண்ணால்தான் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றது என்று நம்பப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண்ணின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை.
விக்கெட் கீப்பர் ஒருவர் கதையில் வருகிறார். நான் இந்த நாவலை எழுதும்போது, தோனி விக்கெட் கீப்பர் கேப்டனாக இருந்ததால் அவரது கதை என்று சொன்னார்கள். இப்போது விராத் கோலியை இதற்குள் இழுத்திருக்கிறார்கள். இந்தக் கதைக்கு சோனம் கபூர் பொருத்தமாக இருப்பார். துல்கர் சல்மான் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். அவரும் சரியான தேர்வாகத்தான் இருக்கும்’ என்றார்.
விராத் கோலி, ’தனது வாழ்க்கைக்குள் அனுஷ்கா சர்மா வந்த பிறகுதான் கிரிக்கெட் திறன் மேம்பட்டது’ என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதையடுத்தே இந்த கதை விராத் கோலியின் கதை என்று கூறப்பட்டது.