சினிமா

‘90 எம்.எல்’ - இயக்குநருடன் தனஞ்ஜெயன் ட்விட்டரில் விவாதம்

‘90 எம்.எல்’ - இயக்குநருடன் தனஞ்ஜெயன் ட்விட்டரில் விவாதம்

webteam

 ‘90 எம்.எல்’ படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் அனிதா உதீப்பிற்கும், தயாரிப்பாளர் தனஞ்ஜெயனுக்கும் இடையே ட்விட்டர் பக்கத்தில் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் '90 எம்.எல்'. இப்படத்திற்கு 'ஏ' தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. நடிகர் சிம்பு இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்து வெளியாகள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உருவான நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. 

ஆபாச வசனங்கள், முத்தக்காட்சிகள் என ட்ரெய்லர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே நல்ல பெயர் வாங்கிய ஓவியா, இது போன்ற அடெல்ட் படங்களில் நடிப்பதை தற்போது தவிர்த்து இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். விமர்சனங்களுக்கு பதிலளித்த ஓவியா, விதையை வைத்தே பழத்தின் ருசியை தீர்மானிக்காதீர்கள் என்று பதிலளித்தார்.

இந்நிலையில்,  ‘90 எம்.எல்’ படம் தமிழகமெங்கும் நேற்று வெளியானது. இதையடுத்து இப்படம் குறித்து சமூகவலைத்தளத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இப்படம் குறித்து மருத்துவர் அபிலாஷா விமர்சனம் செய்திருந்தார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் “டாக்டர் அபிலாஷாவின் இந்த நேர்மையான விமர்சனத்தைப் பார்த்து, '90எம்.எல்' திரைப்படம் சமூகத்தில் சீரழிவை எப்படி ஏற்படுத்தும் என்பதைத் இயக்குநர் அனிதா உதீப் தெரிந்து கொள்ளுங்கள். கொஞ்சமாவது சமூக பொறுப்புடன் இருங்கள். பணத்திற்காக இளைஞர்களிடையே விஷத்தைப் பரப்பாதீர்கள்”என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் அனிதா உதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் “தனஞ்ஜெயன் அங்கிள். நான் சமூகத்துக்குத் தேவையான ‘மிஸ்டர் சந்திரமௌலி’ போன்ற படத்தை எடுத்து அதில் கில்மா பாடல்களை வைக்கவில்லை. ’90 எம்.எல்’ வயது வந்தவர்களுக்கான படம். அது பொழுது போக்கிற்கான படம். நீங்கள் 'சேட்டை'யில் பேசியதைப் போல அசிங்கத்தைப் பற்றி பேசவில்லை. பெண்கள் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் அசிங்கத்தைப் பற்றி பேசியிருக்கிறேன்" எனத் தெரிவித்தார். 

அனிதா உதீப்க்கு பதில் அளித்த தனஞ்ஜெயன்,  “அது எனக்கு புரிகிறது ஆண்ட்டி. பலரால் இந்தப் படம் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவே அந்த வீடியோவை வலைப்பக்கத்தில் பகிர்ந்தேன். எங்கள் படங்களில் பெண்களை தரம் தாழ்த்துமாறு எந்த அசிங்கத்தையும் காட்டவில்லை. 90 எம்எல் படத்தில் வக்கிரமான வசனங்களும், காட்சிகளும் இழிவுதான்" என குறிப்பிட்டுள்ளார்.