சினிமா

நடிகை ஆண்ட்ரியாவை கவுரப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்

சங்கீதா

பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் உட்பட பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

இதேபோல் தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், நடிகைகள் மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், ‘துபாய் எக்ஸ்போ 2020’ நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் யுவன்சங்கர் ராஜா தலைமையிலான இன்னிசை கச்சேரியில் கலந்துகொண்டுள்ள ஆண்ட்ரியாவிற்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதனை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.