லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ‘லியோ’ படம் தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள போஸ்டர் ஒன்றில் நடிகர் விஜய் கையில் துப்பாக்கியுடன் வாயில் சிகரெட் பிடித்தப்படி இருக்கும் புகைப்படம் வெளியானது.
தற்போது இந்த புகைப்படம் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு தற்போது ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்க்கு இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் என இளம் ரசிகர்கள் பட்டாளம் அனேகம்பேர் உள்ள நிலையில் அவர் புகைப்பிடிக்கும் போஸ்டர் என்பது இளைய தலைமுறையை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் என பலரும் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தான் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் விஜய்க்கு அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.
புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.