சினிமா

அசோக்குமார் கடிதத்தில் உண்மை இல்லை: அன்புச்செழியன் நிறுவனம்

webteam

தற்கொலை செய்து கொண்ட இணை தயாரிப்பாளர் அசோக்குமாரின் குற்றச்சாட்டை அன்புச்செழியனின் தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் மறுத்துள்ளது.

சசிக்குமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் திரைத்துறை உள்பட தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்த, அவரது கடிதத்தின் அடிப்படையில் பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அசோக்குமாரின் கடிதக்குற்றச்சாட்டை, அன்புச்செழியன் நிறுவனம் மறுத்துள்ளது. ‌இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாளர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில், அசோக்குமார் எழுதி வைத்ததாக ஊடகங்களில் வெளியான கடிதம் அவர் எழுதியதுதானா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. படத் தயாரிப்பாளர் சசிக்குமார் தான் தங்களிடம் கடன் பெற்றிருப்பதாகவும், அசோக்குமாருக்கும் தங்களுக்கும் கொடுக்கல், வாங்கல் ஏதும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் தங்களிடம் எந்தவித வியாபார தொடர்பும் இல்லாத அசோக்குமார் தங்களது பெயரை கடிதத்தில் எழுதியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் தொழில் செய்வதாகவும், எங்கும் தங்கள் மீது எந்த புகாரும் கிடையாது எனவும் அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசோக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் எள்ளளவும் உண்மை இல்லை என்றும் அன்புச்செழியனின் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.